ETR.FM

'நான் சுயநல அரசியல்வாதிகளைத்தான் குறிப்பிட்டேன்'.

11.11.2026 08:42 6 நிமிட வாசிப்பு
'நான் சுயநல அரசியல்வாதிகளைத்தான் குறிப்பிட்டேன்'.

தார்மீகக் கண்டனங்களுக்குப் பயந்து, 'நான் சுயநல அரசியல்வாதிகளைத்தான் குறிப்பிட்டேன்' என்று மறுப்பது வேடிக்கையானது.

* கூற்றை மாற்றி மறுப்பது அறமற்ற, தகுதியற்ற பண்பு என்கிறது தொல்காப்பியம்.

* ஜெயராஜின் உரை, தற்செயலாக நழுவிய சொற்கள் அல்ல!

தமிழர் வரலாற்றில், ஒவ்வொரு காலத்துக்கும் ஏற்பத் தமிழர் நாகரிகத்தைக் காத்தும் வளர்த்தும் வந்த இலக்கிய மேடைகள் என்பன வெறும் சொற்சிலம்பங்களுக்கான களங்கள் அல்ல. அவை சமூகத்தின் மனச்சாட்சியைத் தட்டியெழுப்பும் அறத்தின் பீடங்கள்.

யாழ். நல்லூர் மண்ணில் நிகழ்ந்த கம்பன் விழா மேடையில், ஈழத்தமிழர்களின் முப்பதாண்டு காலத் தியாக வரலாற்றை 'மறக்க வேண்டும்' என்றும், தாயகத்து உறவுகளுக்கான புலம்பெயர் 'நிதிப் பங்களிப்பை நிறுத்த வேண்டும்' என்றும் கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் முன்வைத்த கோரிக்கைகள், இன்று தமிழ் உலகம் எங்கும் பெரும் அதிர்வலைகளையும் தார்மீகக் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளன.

தமக்கெதிராக எழுந்த மக்கள் திரளின் தார்மீகக் கண்டனங்களுக்குப் பயந்து, 'நான் சுயநல அரசியல்வாதிகளைத்தான் குறிப்பிட்டேன்' என்று ஜெயராஜ் தற்போது வழங்கிவரும் ஊடக மறுப்புக்கள், அவரது அசல் மேடைப் பேச்சின் ஆழமான அரசியலையும் அதன் பின்னணியில் உள்ள கருத்தியலையும் மறைத்துவிடப் போதுமானவை அல்ல.

ஏனெனில், ஒரு சொல்லின் பொருளும் அதன் பின்னுள்ள நோக்கமும் அச்சொல் பிரசவிக்கப்பட்ட கணத்திலேயே வரலாற்றில் பதிவாகிவிடுகின்றன.

இலக்கியப் பரப்பில் நின்றுகொண்டு அதிகார வர்க்கத்தின் குரலாக ஒலிப்பதும், ஒரு தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்தை ஆரம்பம் முதலே மிக நுட்பமான முறையில் விமர்சித்து நிராகரிப்பதும் ஜெயராஜிற்குப் புதியதொன்றல்ல.

இந்திய வலதுசாரிச் சிந்தனைப் போக்குகளுடனும், ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க மறுக்கும் பிராந்திய அதிகார வர்க்கத்துடனும் தம்மைக் காலங்காலமாகப் பிணைத்துக் கொண்டுள்ள ஒருவரால் மட்டுமே, இத்தனை துயரங்களைச் சுமந்த ஒரு சமூகத்தைப் பார்த்து 'வரலாற்றை மறந்திடுங்கள்' என்று மிக எளிதாகக் கூறிவிட முடிகிறது.

தமிழ் இலக்கியங்களை வாழ்நாளெல்லாம் பயின்ற ஒருவர், அதிகாரத்தின் நிழலில் நின்று கொண்டு மக்களின் வலிகளைப் புறந்தள்ளுவது என்பது, சங்க இலக்கியங்கள் கற்பித்த 'அறம்' என்ற தூய கோட்பாட்டிற்கு முற்றிலும் முரணானதாகும்.

ஜெயராஜின் கடந்தகால அரசியல் நிலைப்பாடுகளை உற்றுநோக்கினால், அவர் ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆயுதப் போராட்ட வடிவத்தையோ அல்லது அதன் தியாகங்களையோ ஒருபோதும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டவர் அல்ல என்பது பட்டவர்த்தனம்.

மாறாக, இந்திய மேலாதிக்கக் கொள்கைகளைத் தழுவி, ஆன்மீக மற்றும் கலாசாரப் போர்வையில் ஈழத்தமிழர்களின் தேசிய அரசியல் எழுச்சியை மழுங்கடிக்கும் போக்கையே அவர் தொடர்ச்சியாகக் கடைப்பிடித்து வந்துள்ளார்.

தொல்காப்பியமும் புறநானூறும் மனித வாழ்வின் ஆகச்சிறந்த ஒழுக்கமாக நெறிப்படுத்துவது 'வாய்மை' என்பதையும், எத்தகைய சூழலிலும் மாறாத 'அறத்து நீற்றலையும்' தான்.

பொதுமேடைகளில் ஒன்றை மிகத் தெளிவாக உரைத்துவிட்டு, அதன் விளைவுகளுக்கு அஞ்சி, பின்னர் வேறு ஒரு வியாக்கியானம் கொடுத்துத் தன்னைத் தற்காத்துக் கொள்ள முற்படுவது, ஓர் இலக்கிய அறிஞனுக்கு அழகல்ல.

தொல்காப்பியம் பொருளதிகாரத்தில், "எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது தான் அமர்ந்து வரூஉம் மேவற்றாகும்" என்று குறிப்பிடுகிறது.

மக்களின் இன்ப துன்பங்களை உணராது, இக்கட்டான வேளையில் தன் கூற்றை மாற்றி உரைப்பது அறமற்ற, தகுதியற்ற பண்பாகவே தொல்காப்பிய நெறியில் பார்க்கப்படுகிறது.

புறநானூற்றின் 195 ஆவது பாடலில் மதுரைக் கணக்காயனார் மகன் நக்கீரனார், மனித வாழ்வின் நிலையற்ற தன்மையைக் கூறி, வாழ்வின் ஒரே பயன் 'அறம் செய்தல்' மட்டுமே என்று சுட்டிக்காட்டுவார்.

அதைவிடவும், ஈழத்து மண்ணிற்கு மிகவும் பொருத்தமான புறநானூற்றின் 182 ஆவது பாடலான 'உண்டால் அம்ம இவ்வுலகம்' என்ற கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதியின் வரிகள், தமக்கென வாழாது பிறர்க்கென வாழும் புனிதமான மனிதர்களால் தான் இவ்வுலகம் இயங்குகிறது என்கிறது.

தாயகத்தில் போரினால் சிதைந்துபோய், எவ்வித அரச ஆதரவும் இன்றித் தவிக்கும் தங்களின் சொந்தத் உறவுகளுக்கு, உலகெங்கும் பரந்து வாழும் புலம்பெயர் தமிழர்கள் வழங்கும் நிதி என்பது ஏதோ வெறும் பணப் பரிமாற்றம் அல்ல; அது 'பிறர்க்கென வாழும்' அந்தப் புறநானூற்று அறத்தின் தொடர்ச்சி.

அந்த அறத்தின் கரங்களைத் துண்டிக்கச் சொல்வதும், பின்னர் அதற்கொரு போலி விளக்கம் தருவதும், அப்புனிதமான ஈழத்து அறவாழ்வையே இழிவுபடுத்துவதாக அமைகிறது.

வள்ளுவப் பெருந்தகையும், "மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்" என்கிறார்.

மேடையில் ஒரு நோக்கத்தோடு பேசிவிட்டு, மக்கள் எதிர்த்தவுடன் தன் கூற்றை மாற்றுவது மனத்தூய்மையின்மை ஆகாதா?

அத்துடன் "சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து" என்ற குறளுக்கு ஏற்ப, தான் பேசும் சொல் எத்தகைய விளைவை ஏற்படுத்தும் என்ற தார்மீகப் பொறுப்பு ஜெயராஜிற்கு இருந்திருக்க வேண்டும்.

ஒரு நேர்மையான தமிழ் இலக்கிய அறிஞன் என்பவன், மக்களின் துயரங்களையும் அவர்களின் கூட்டு உளவியலையும் நன்குணர்ந்தவனாக இருக்க வேண்டும்.

மக்களின் தியாகங்களை மழுங்கடிக்கும் கருத்துக்களைப் பொதுமேடைகளில் விதைத்துவிட்டு, பின்னர் 'நான் அப்படிச் சொல்லவில்லை, இப்படித்தான் சொன்னேன்' என்று மக்களை முட்டாளாக்க முற்படுவது ஒருபோதும் அறிவுஜீவித்தனம் ஆகாது.

ஜெயராஜின் இந்த உரை, தற்செயலாக நழுவிய சொற்கள் அல்ல; மாறாக, இது தமிழ்த்தேசியச் சிந்தனைக்கு எதிராகவும், ஈழத்தமிழர்களின் கூட்டு நினைவாற்றலை (Collective Memory) அழிப்பதற்காகவும் திட்டமிட்டு அவிழ்த்துவிடப்பட்ட ஒற்றையாட்சி அதிகாரத்தின் குரலாகும்.

ஒரு தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்தை இழிவுபடுத்துவது என்பது கம்பராமாயணத்தில் குகனைப் பாடிய கம்பனின் நெறிக்கும் மாறானது.

குகனின் எளிய அன்பையும் தியாகத்தையும் இராமன் மதித்துக் போற்றியதைப் போல, தாயகத்து மக்களின் தியாகங்களை இலக்கியவாதிகள் போற்றியிருக்க வேண்டும்.

ஒரு தேசிய இனம் தனது கடந்தகாலப் போராட்டங்களையும் தியாகங்களையும் மறக்கும் கணத்தில், அது தனது எதிர்கால அடையாளத்தையும் இழந்துவிடுகிறது என்ற வரலாற்று உண்மையை அறிந்தே இத்தகைய கருத்துக்கள் விதைக்கப்படுகின்றன.

பேரறிவும் இலக்கியப் புலமையும் வாய்க்கப்பெற்ற ஒரு மாபெரும் உரையாளர் என்று தனக்குத்தானே மகுடம் சூட்டிக்கொள்ளும் ஜெயராஜ், தனக்கு இருப்பதாகக் காட்டிக்கொள்ளும் அந்தத் திறமையைத் திக்கற்ற மக்களின் விடிவிற்காகவும் அவர்களின் நீதிக்காகவும் பயன்படுத்தியிருக்க வேண்டும் அல்லவா?

அதைவிடுத்து, அதிகார வர்க்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு அமையத் தனது தாய்நிலத்து மக்களின் தார்மீக உரிமைகளைத் தாரைவார்க்கும் பாணியில் பேசுவது பேராபத்தானது.

இனியாவது, காலம் கையளித்த இலக்கியப் பாடங்களில் இருந்தும், மக்களின் தார்மீகக் கோபத்தில் இருந்தும் ஜெயராஜ் தனது தவறுகளை உணர்ந்து, அதிகாரத்தின் பக்கமிருந்து மக்களின் பக்கம் தனது பார்வையைத் திருப்ப வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் எதிர்பார்ப்பாகும்.

அ.நிக்ஸன்-

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்