டெல்டாவை விட கொடூரமான தென் ஆப்ரிக்காவில் புதிய வகை கொரோனா

28.11.2021 07:53:40

டெல்டா உள்ளிட்ட இதுவரை மாற்றமடைந்த கொரோனா வைரஸ்களிலேயே மிகவும் கொடியதாக 50 பிறழ்வுகளுடன் புதிய வகை கொரோனா வைரஸ் தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது. இது தடுப்பூசிகளை தாண்டி தாக்கக் கூடியது என்பதால் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் உலக நாடுகள் மீண்டும் அச்சமடைந்துள்ளன.

உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தற்போது பெரும்பாலான நாடுகளில் வெகுவாக குறைந்து விட்டது. சுமார் 2 ஆண்டுக்குப் பிறகு மக்கள் மீண்டும் சகஜ வாழ்க்கைக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே நம்மை அழைத்துச் செல்லக் கூடிய அளவிற்கான புதிய வகை கொடிய கொரோனா வைரஸ் தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்டிருப்பது உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.பி.1.1.529 என்ற அறிவியல் பூர்வ பெயரை கொண்ட இந்த வைரசுக்கு ‘நு’ என பெயரிடப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன.

மற்ற வைரஸ் பிறழ்வுகளிலேயே மிக மோசமாக 50 பிறழ்வுகளை இந்த புதிய வகை வைரஸ் கொண்டிருப்பதே பீதிக்கு காரணமாகும். இதன் முள் புரதத்தில் (ஸ்பைக் புரோட்டின்) மட்டுமே 30க்கும் மேற்பட்ட பிறழ்வுகளைக் கொண்டிருக்கின்றன.

இந்த முள்ளை பயன்படுத்தி தான் வைரஸ்கள் மனித உடலுக்குள் நுழையும், நோய் மண்டலத்தை தாக்கும். எனவே, கொரோனா தடுப்பூசிகள் அனைத்துமே இந்த புரதத்தை  குறிவைத்து தயாரிக்கப்படுகின்றன.

இந்தியாவில் பெரும் உயிர் பலியை ஏற்படுத்திய டெல்டா வைரஸ் உலகின் பல நாடுகளிலும் பயங்கர பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அத்தகைய டெல்டா வைரசில் கூட இவ்வளவு பிறழ்வுகள் இல்லை என்பதால், புதிய வைரஸ் மிகவும் கவலை தரக்கூடியதாக இருப்பதாக மருத்துவ ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.