சாலமன் தீவில் நடந்த வன்முறைக்கு பின், மூன்று சடலங்களை போலீசார் கண்டெடுத்தனர்

28.11.2021 07:54:31

ஆஸ்திரேலியா அருகில் அமைந்துள்ள சாலமன் தீவில் நடந்த வன்முறைக்கு பின், மூன்று சடலங்களை போலீசார் கண்டெடுத்தனர்.

தெற்கு பசிபிக் பெருங்கடலில் ஏராளமான தீவுக்கூட்டங்களை உள்ளடக்கியது சாலமன் தீவுகள். இதன் பிரதமராக மனாசே சோகாவரே பதவி வகிக்கிறார். தைவான் நாட்டுடன் இருந்த உறவை சமீபத்தில் துண்டித்த மனாசே, சீனாவுடன் கைகோர்த்தார். பிரதமரின் இந்த முடிவுக்கு அந்நாட்டு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நாடு முழுதும் பல இடங்களில் போராட்டம் வெடித்தது.பிரதமர் மனாசே சோகாவரே பதவி விலக வலியுறுத்தி ஹொனியரா நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று திரண்டனர்.

அப்போது வன்முறை வெடித்தது. போலீசார் தடியடி நடத்தி பொதுமக்களை விரட்டியடித்தனர். அங்குள்ள சீனர்களின் கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு தீ வைத்தனர். இதையடுத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் கலவரம் நடந்த இடத்தில் இருந்து தீயில் எரிந்து கருகிய நிலையில் மூன்று சடலங்களை போலீசார் கண்டுபிடித்தனர். விசாரணை நடக்கிறது.