பிரிட்டனில் இந்திய வம்சாவளியினைச் சேர்ந்த 50 பேருக்கு வீர தளபதி விருது

02.01.2022 14:41:04

ஐரோப்பிய நாடான பிரிட்டனில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவ பேராசிரியர் அஜய் குமார் கக்கர் உள்ளிட்ட 50 பேருக்கு கே.பி.இ., எனப்படும், பிரிட்டன் சாம்ராஜ்யத்தின் வீர தளபதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் பல்வேறு துறைகளில் சிறப்பாக சேவை செய்தவர்களுக்கு கே.பி.இ., - ஓ.பி.இ., விருதுகள் வழங்கி கவுரவிப்பது வழக்கம். இந்த வகையில் புத்தாண்டு தினமான நேற்று 1,278 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் லண்டன் பல்கலை அறுவை சிகிச்சை துறை பேராசிரியர் அஜய் குமார் கக்கர் உட்பட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 50 பேர் இடம் பெற்றுள்ளனர்.

இது குறித்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியதாவது:பிரிட்டனின் இந்த உயரிய விருதை பெறுவோர், சமுதாயத்திற்கு மிகச் சிறந்த பங்களிப்பை வழங்கி உள்ளனர். இந்திய வம்சாவளியான அஜய் குமார் கக்கர் பல்வேறு அமைப்புகள், அறக்கட்டளைகளில் தலைமைப் பொறுப்பேற்று மருத்துவ துறை வாயிலாக பொது சுகாதாரத்திற்கு சிறந்த சேவையாற்றி வருகிறார். நாட்டு மக்கள் நலனுக்கான இத்தகையோரின் அர்ப்பணிப்பு, சீரிய சேவை ஆகியவற்றை கவுரவிக்க நமக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.