ஐரோப்பாவிலும் 'ஒமைக்ரான்'

29.11.2021 07:35:37

ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி என, மேலும் பல நாடுகளுக்கு, ஒமைக்ரான் எனப்படும் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் பரவத் துவங்கியுள்ளது. இதனால், உலக நாடுகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளன.


கொரோனா வைரஸ் பரவல் துவங்கி இரண்டாண்டுகள் நிறைவடைய உள்ளது. ஏற்கனவே உலகெங்கும் 50 லட்சம் பேர் கொரோனா வைரசுக்கு உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் பல வகையில் உருமாறியுள்ள புதிய ஒமைக்ரான் என்ற கொரோனா வைரஸ் பரவல் தென்படத் துவங்கியுள்ளது. முழு பரிசோதனைதென் ஆப்ரிக்காவில் முதலில் தென்பட்ட இந்த வகை வைரஸ், இதுவரை இருந்த உருமாறிய வைரஸ்களை விட மிகவும் மோசமானதாக கருதப்படுகிறது. 'மிக வேகமாக பரவக் கூடியது, தடுப்பூசி போட்டவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது, எந்த அறிகுறிகளும் இல்லாதது' என, இந்த வைரஸ் குறித்து இதுவரை பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகிஉள்ளன.

ஏற்கனவே இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து தென் ஆப்ரிக்கா உட்பட குறிப்பிட்ட சில நாடுகளுக்கான பயணக் கட்டுப்பாடுகளை அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள், ஜப்பான் என பல நாடுகள் விதித்துள்ளன. அந்த நாடுகளில் இருந்து வரும் பயணியருக்கு முழு பரிசோதனை செய்யப்படுகிறது.இது ஒருபுறம் இருக்க ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு மேலும் சில நாடுகளுக்கு பரவியுள்ளது. தென் ஆப்ரிக்கா சென்று திரும்பிய இருவருக்கு புதிய வகை வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரிட்டன் தெரிவித்து உள்ளது. இதையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளை புதிதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துஉள்ளார். ஏற்கனவே தடுப்பூசி போட்டவர்களுக்கு, 'பூஸ்டர்' எனப்படும் மூன்றாவது, 'டோஸ்' தடுப்பூசி வழங்க அவர் உத்தரவிட்டு உள்ளார்.