ஐ.எஸ் தலைவருக்கு ஐ.நா தடை

25.12.2021 11:15:40

ஐ.எஸ்., கோரசன் பயங்கரவாத அமைப்பின் மூத்த தலைவரான சனாவுல்லா ஜபாரிக்கு, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்துள்ளது.

சர்வதேச அளவில் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வரும் பயங்கரவாதிகளுக்கு ஐ.நா., சபையின் பாதுகாப்பு கவுன்சில் தடைகளை விதித்து வருகிறது. இந்நிலையில் தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானை சேர்ந்த, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் மூத்த தலைவர் ஒருவருக்கு தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின் தடைகள் குழு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஐ.எஸ்., கோரசன் பயங்கரவாத அமைப்பின் தலைவராக சனாவுல்லா ஜபாரி, 27, இருந்து வருகிறார்.

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்துவதிலும், அவற்றுக்கு நிதியுதவிகளை பெற்று தருவதிலும் முக்கிய பங்கு வகிக்கும் ஜபாரிக்கு, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் சார்பில் தடைகள் விதிக்கப்படுகின்றன.

இதன்படி அவரது சொத்துக்கள் முடக்கப்படுகின்றன; வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள அவருக்கு தடை விதிக்கப்படுகிறது. வெளிநாடுகளுக்கு ஆயுதங்களை வினியோகிக்கவும் தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.