ஏமன் அகதிகள் தடுப்பு மையம் மீது விமான தாக்குதல்

22.01.2022 11:18:29

ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி அரசு படைகளுக்கும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இந்தப் போரில் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக வான்வழியாகவும் தரைவழியாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களும் தாக்குதல் நடத்துகின்றனர்.

 

ஐக்கிய அரபு அமீரகம் மீது இதுவரை இல்லாத வகையில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியதாலும், சவுதி நகரங்களை குறிவைத்து ஏவுகணை மற்றும் ட்ரோன்களை ஏவியதாலும், ஹவுத்தி ராணுவ இலக்குகளை குறிவைத்து சவுதி கூட்டுப்படை வான் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.

 

இந்நிலையில், ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள சாதா மாகாணத்தில் நேற்று விமான தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில், அகதிகளுக்கான தற்காலிக தடுப்பு மையத்தில் தங்கியிருந்த தென் ஆப்பிரிக்க அகதிகள் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அங்கு மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என கருதப்படுகிறது.

 

ஏமனில் உள்நாட்டுப் போர் தீவிரமாக நடைபெறும் சூழ்நிலையிலும், ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து அகதிகள் ஏமன் வழியாக சவுதி அரேபியா அல்லது வளம்மிக்க வளைகுடா நாடுகளுக்கு இடம்பெயர்கின்றனர். அவர்களுக்கு உரிய அனுமதி கிடைக்கும் வரை ஏமனில் உள்ள தடுப்பு மையங்களில் தங்கவைக்கப்படுகின்றனர். 

 

தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்திய பிறகே கருத்து தெரிவிப்பதாக சவுதி கூட்டுப்படை தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு ஐ.நா. சபை கண்டனம் தெரிவித்துள்ளது.