துருக்கியில் பயங்கர வெடிவிபத்து

20.01.2022 10:22:19

ஈராக்கின் வடக்கு பகுதியான கிர்குக்கின் எண்ணெய் வயல்களில் இருந்து துருக்கியின் செயான் துறைமுகத்துக்கு குழாய் வழியாக கச்சா எண்ணெய் எடுத்துச்செல்லப்படுகிறது.

 

இந்த நிலையில், துருக்கியில் கஹ்ராமன்மாராஸ் மாகாணத்தில் பசார்சிக் நகருக்கு அருகே நேற்று முன்தினம் பிற்பகலில் எண்ணெய் குழாயில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டு தீப்பிடித்து எரியத்தொடங்கியது. இது பெரும்பாதிப்புகளை ஏற்படுத்துவதற்கு முன்பாக எண்ணெய் குழாய் மூடப்பட்டுவிட்டது. அந்த பகுதியில் அமைந்துள்ள நெடுஞ்சாலையும் மூடப்பட்டது.

 

 

இந்த வெடிவிபத்தால் யாருக்கும் காயம் இல்லை. வெடிவிபத்து குறித்து குழாய்வழி எண்ணெய் நிறுவனமான போட்டாஸ் கூறும்போது, “எண்ணெய் குழாய் வெடிவிபத்தால் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டு விட்டது. தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பிறகு கூடிய விரைவில் செயல்பாடுகள் மீண்டும் தொடங்கும்” என்று தெரிவித்தது.

 

வெடிவிபத்துக்கான காரணம் பற்றி விசாரணை நடத்தப்படுகிறது. 1984-ம் ஆண்டு முதல் துருக்கி அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்திய குர்து இன கிளர்ச்சியாளர்கள் போராடி வருவதும், அவர்கள் எண்ணெய் குழாய்களை குண்டுகள் வீசி சேதப்படுத்தியதும் கடந்த கால வரலாறு என்பது குறிப்பிடத்தக்கது.