வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்: சிலி புதிய அதிபர்

21.12.2021 09:05:24

''கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்,'' என, சிலி நாட்டின் புதிய அதிபர் கேப்ரியல் போரிக், 35, தெரிவித்துள்ளார்.

தென் அமெரிக்காவைச் சேர்ந்த சிலி நாட்டில் புதிய அதிபர் தேர்வுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இதில் சமூக ஒருங்கிணைப்பு கட்சியைச் சேர்ந்தவரும், முன்னாள் இடதுசாரி மாணவர் தலைவருமான, கேப்ரியல் போரிக், தன்னை எதிர்த்து போட்டியிட்ட குடியரசு கட்சியைச் சேர்ந்த, ஜோஸ் அன்டோனியா காஸ்டை விட அதிக ஓட்டுகள் வாங்கி வெற்றி பெற்றுள்ளார்.

இத்தேர்தலில் கேப்ரியலுக்கு 56 சதவீத ஓட்டுகள்கிடைத்துள்ளன. முதற்கட்ட ஓட்டுப் பதிவில் வாங்கியதை விட இரண்டாம் கட்டத்தில் 12 லட்சம் ஓட்டுகள் அதிகம் பெற்று கேப்ரியல் போரிக் வெற்றி பெற்றுள்ளார்.

இது குறித்து கேப்ரியல் போரிக் பேசியதாவது: சிலியில் சர்வாதிகாரஆட்சி முறைக்கு முடிவு கட்டியுள்ளோம். ஐரோப்பிய நாடுகளைப் பின்பற்றி சமூக ஜனநாயக ஆட்சி முறை அமல்படுத்தப்படும். தேர்தல் பிரசாரத்தின் போது கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுபோம்.

குறிப்பாக வறுமை ஒழிப்பு, சமத்துவ சமூகம், புதிய அரசில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் ஆகிய வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசு முக்கியத்துவம் அளிக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.சிலியின் மிக குறைந்த வயதுடைய அதிபர் என்ற சிறப்பை கேப்ரியல் போரிக் பெற்றுள்ளார்.