பிரித்தானியாவில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு
ஒமைக்ரோன் வைரஸ் தொற்றுப் பரவலை தடுக்கும் வகையில் இங்கிலாந்து தவிர்ந்த பிரித்தானியாவின் ஏனைய மூன்று தேசங்களில் புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளன.
பிரித்தானியாவில் தீவிரமடையும் ஒமைக்ரோன் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் ஸ்கொட்லாந்து, வேல்ஸ் மற்றும் வட அயர்லாந்தில் புதிய கொவிட் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளன.
விருந்தோம்பல், பொழுதுபோக்கு தொழிற்துறைகளில் புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவந்துள்ள பிரித்தானியாவின் குறித்த மூன்று தேசங்களும், ஒன்றுகூடல்களில் பங்குகொள்ளக் கூடியவர்களின் எண்ணிக்கை மட்டுப்பாடுகள் மற்றும் சமூக இடைவெளியை பேணும் விதிகளையும் நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளன.
இங்கிலாந்தில் நத்தார் பண்டிகைக்கு பின்னரான புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பில் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் இதுவரை எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனினும் தேவை ஏற்படும் பட்சத்தில் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த தயங்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டிருந்தார்.
நத்தார் பண்டிகை நாளான நேற்றும் இன்றும் புதிய கொரோனா தொற்று விபரங்களை பிரித்தானிய அரசாங்கம் வெளியிடவில்லை.
எனினும் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை புதிய உச்சமாக ஒரு இலட்சத்து 22 ஆயிரத்து 186 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.