2022ம் ஆண்டு கொரோனாவை முடிவுக்கு கொண்டு வரும் ஆண்டாக அமைய வேண்டும்

22.12.2021 11:58:10

2022-ம் ஆண்டு கொரோனாவை முடிவுக்குக் கொண்டுவரும் ஆண்டாக இருக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. உலகத்தையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்று 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்டது.

பின்னர் இந்த கொடி நோய்த்தொற்று உலகம் முழுவதும் பரவியது. தற்போது கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து ஓமிக்ரான்  என்னும் புதிய அவதாரத்துடன் பரவி வருகிறது. இது  தடுப்பூசிகளின் செயல்திறனை குறைத்து அதிக ஆபத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட வீரியமிக்க ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ், இந்தியா உட்பட 90 உலக நாடுகளில் பரவி உள்ளது.

இந்த நிலையில் ஜெனீவாவில் செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், \'2020-ல் எச்.ஐ.வி, மலேரியா மற்றும் காசநோய் ஆகியவற்றால் ஏற்பட்ட உயிரிழப்புகளை விட, 2021-ல் கொரோனா காரணமாக உலகளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகம்.

கொரோனாவின் மாறுபாடான ஓமிக்ரான்  தென் ஆப்பிரிக்காவின் கண்டறியப்பட்ட நிலையில், தற்போது அது பல நாடுகளுக்கு பரவி வருகிறது. 2022-ல் நாம் தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவரும் ஆண்டாக அமைய வேண்டும்.2022ம் ஆண்டு அனைத்து நாடுகளும் எதிர்கால பேரழிவைத் தடுப்பதற்கும், நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கான முயற்சிகளை விரைவுபடுத்துவதற்கும், முதலீடு செய்யும் ஆண்டாகவும் இருக்க வேண்டும்\'. என்று அவர் கூறினார்.