ETR.FM

சீனப் பிரஜைகள் கைது.

15.10.2024 08:20 3 நிமிட வாசிப்பு
சீனப் பிரஜைகள் கைது.

இணையவழி நிதி மோசடி தொடர்பில் அண்மையில் கைது செய்யப்பட்ட சீனப் பிரஜைகள் குறித்து கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

   

இணையவழி மோசடியில் கைதுசெய்யப்பட்டவர்கள் குறித்து சீனா உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும், அவர்களின் உரிமைகள் மற்றும் நலன்கள் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்வதுடன், இலங்கை சட்ட விதிமுறைகளுக்கினங்க அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு சீனா தொடர்ந்தும் இலங்கைக்கு ஆதரவளிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் இரு நாட்டு மக்களின் சொத்துக்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பது மட்டுமல்லாமல், சீனாவின் நற்பெயரை கடுமையாக பாதிப்பதாகவும், இரு நாடுகளுக்கிடையேயான பாரம்பரிய நட்புறவை பாதிக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

"சந்தேக நபர்களை சட்டப்படி அவர்களின் நியாயமான உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்கும் வகையில், நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனவும் சீனத் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இணையவழி மோசடிகள் 1990களில் சீனாவில் தோன்றத் தொடங்கி, அதன் பின்னர் பெருமளவில் பரவி ஏராளமான மக்களைப் பாதித்தது. சீன அரசாங்கம் மக்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையைக் கடைப்பிடிக்கிறது, அத்துடன் இணையவழி மோசடிகளைத் தடுக்கும் பாதையைத் தொடர்ந்து ஆராய்ந்து, பல்வேறு பணிகளை ஆழமாக முன்னெடுத்துச் செல்கிறது.

“2021 ஆம் ஆண்டில் சீனாவில் இணையவழி மோசடி குறித்து தீர்க்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட ஐந்து மடங்கு அதிகம். சீனாவில் இதுபோன்ற வழக்குகளின் நிகழ்வு ஜூன் 2021 முதல் தொடர்ந்து 17 மாதங்களுக்கு ஆண்டுக்கு ஆண்டு குறைந்துள்ளது, இது அடிக்கடி நிகழும் போக்கைத் திறம்பட கட்டுப்படுத்துவதைக் காட்டுகிறது.

"இன்று உலகில், இணையவழி மோசடி குற்றங்கள் பல்வேறு நாடுகளில் வேகமாக வளர்ந்து பரவி வருகின்றன, மேலும் அவை உலகளாவிய அச்சுறுத்தலாகவும், மாறியுள்ளன. சமீபத்திய ஆண்டுகளில் இத்தகைய மோசடிகளை எதிர்த்துப் போராடுவதற்கு மியான்மர், கம்போடியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட பல நாடுகளுடன் பலனளிக்கும் ஒத்துழைப்பை சீனா மேற்கொண்டுள்ளது.

அந்த முயற்சியின் பலனாக மிகப் பெரிய குற்றக் கும்பல்கள் அடித்து நொறுக்கப்பட்டதுடன், குறிப்பிடத்தக்களவு கட்டுப்படுத்தப்பட்டாலும், சில குற்றக் குழுக்கள் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஏனைய நாடுகளுக்குச் சென்றன எனவும் தூதரகம் தெரிவித்தது.

மேலும், இணையவழி மோசடிகள் தொடர்பில் பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததினால் சில இலத்திரனியல் மோசடிக் கும்பல்கள் இலங்கைக்கு இடம்பெயர்ந்து தொடர்ந்தும் செயற்படுவதாக சீனத் தூதரகம் மேலும் வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் பல தொலைத்தொடர்பு மோசடி வழக்குகளின் சமீபத்திய போக்குக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் என்றும் இலங்கையில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்தப் பிரச்சினைக்கு கூட்டாக தீர்வு காண்பதற்கு விரைவான மற்றும் பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்கவும் சீனா தயாராக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்