அமெரிக்காவில் அதிரடி காட்டும் கோவிட்
அமெரிக்காவில் நேற்று (ஜன.,03) ஒரேநாளில் 10 லட்சம் பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகம் முழுவதும் கோவிட் தொற்றின் பாதிப்புகள் மீண்டும் ருத்ரதாண்டவம் ஆடிவருகிறது. அந்த வகையில் அமெரிக்காவில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை படுவேகமாக உயர்ந்து வருகிறது. இதற்கிடையே ஒமைக்ரான் தொற்றின் அச்சுறுத்தலும் ஏற்படுவதால், உலக நாடுகள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றன. அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பின்னர் கோவிட் தாக்கம் உச்சத்தை எட்டி வருகிறது. கடந்த ஏழு நாட்களில் சராசரி கோவிட் பாதிப்பு எண்ணிக்கை 4.13 லட்சத்தை தாண்டியுள்ளது.
இந்நிலையில், நேற்று (ஜன.,03) ஒருநாளில் மட்டும் அங்கு 10 லட்சம் பேருக்கு கோவிட் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஹாப்கின்ஸ் பல்கலை தெரிவித்துள்ளது. தற்போது அங்கு 1.04 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். இதில் சுமார் 20 ஆயிரம் பேர் ஐ.சி.யூ.,வில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டினும் கோவிட்டால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.