ETR.FM

அனோஜனின் குடும்பத்தினர் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பு!

12.11.2026 08:56 2 நிமிட வாசிப்பு
அனோஜனின் குடும்பத்தினர் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பு!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த அனோஜன் சிவராசாவை சகல குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிப்பதற்குத் தலையிட்டமைக்காக, அவரது குடும்பத்தினர் இன்று (12) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்துத் தமது நன்றிகளைத் தெரிவித்தனர்.

இதன்போது அவர்களுடன் சிநேகபூர்வமான கலந்துரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி, இலங்கை மக்களுக்காக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முன்னிற்பது தனது பொறுப்பாகும் எனக் குறிப்பிட்டார்.

அனோஜன் சிவராசாவை விடுவிப்பதற்காகச் சவூதி அரேபிய அரசாங்கத்திற்கும், இன, மத, கட்சி, நிற பேதமின்றி இதற்காகத் தலையிட்ட அனைவருக்கும் விசேட நன்றிகள் உரித்தாக வேண்டும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

அனோஜன் சிவராசா தற்போது நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக அவரது பெற்றோர் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர்.

தமது மகனை மரண தண்டனையிலிருந்து காப்பாற்றி சகல குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிப்பதற்காக ஆரம்பம் முதலே தலையிட்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் ஓ.எல். அமீர் அஜ்வாட் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் சவூதி அரேபியாவுக்குச் சென்று சட்ட ரீதியான தலையீடுகளை மேற்கொண்ட சட்டத்தரணிகள் உள்ளிட்ட சகல இலங்கையர்களுக்கும் அனோஜன் சிவராசாவின் தாயார் இதன்போது தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார்.

ஜனாதிபதியை முதன்முறையாகச் சந்தித்த சந்தர்ப்பத்தில் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய, அனோஜன் சிவராசாவை விடுவிப்பதற்குத் தலையிட்டமைக்காக நன்றி தெரிவித்த சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்த், இதே காலப்பகுதியில் பங்களாதேஷ் தம்பதியினருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட சம்பவத்தினால் அனோஜனின் பெற்றோர் கடும் மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருந்ததாகவும் குறிப்பிட்டார்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கோசல விக்கிரமசிங்கவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்