டோக்கியோ பிரதமரின் உத்தியோக பூர்வ இல்லத்தில் பேய்கள்

15.12.2021 05:43:11

கடந்த 1963ஆம் ஆண்டு ஜப்பானில் இடம்பெற்ற ஆட்சி கவிழ்ப்பு முயற்சியின் போது தலைநகர் டோக்கியோவில் உள்ள பிரதமரின் உத்தியோக பூர்வ இல்லத்துக்குள் புகுந்த இராணுவ வீரர்கள் சிலர்  அமைச்சர் ஒருவர் உட்பட அதிகாரிகள் பலரை சுட்டுக்கொலை செய்தனர்.

அதன் பின்னர் அந்நாட்டுப் பிரதமரின் உத்தியோக பூர்வ இல்லத்தில் பேய்கள் இருப்பதாக கட்டுக்கதைகள் எழுந்தன. இதனால் சில பிரதமர்கள் அங்கு  தங்குவதை தவிர்த்து வந்தனர்.

குறிப்பாக கடந்த 8 ஆண்டுகள் பிரதமராக இருந்த ஷின்ஜோ அபே மற்றும் அவருக்கு பின் ஓராண்டு மட்டும் பிரதமர் பதவி வகித்த யோஷிஹைட் சுகா ஆகிய இருவருமே பிரதமரின் உத்தியோக பூர்வ இல்லத்தில் தங்குவதை தவிர்த்தனர்.

இந்நிலையில் கடந்த ஒக்டோபர் மாதம் ஜப்பானின் புதிய பிரதமராக பொறுப்பேற்ற புமியோ கிஷிடோவிடம் பலரும் பிரதமரின் உத்தியோக இல்லத்தில் தங்குவதை தவிர்க்கும்படி கூறினர்.

ஆனால் அதையும் மீறி புமியோ கிஷிடோ அண்மையில்  பிரதமரின் உத்தியோக பூர்வ இல்லத்துக்கு குடி பெயர்ந்தார்.

இந்நிலையில் அங்கு முதல் நாளை எப்படி கழித்தீர்கள் ?என பிரதமரிடம்  நிருபர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு  “நேற்று, இரவு நான் நன்றாக தூங்கினேன். இதுவரை அந்த மாளிகையில் பேய், பிசாசை நான் பார்க்கவில்லை” என நகைச்சுவையாகப் பதிலளித்துள்ளார்.