உடை மாற்றுவதை படம் பிடித்த நடிகை மீது வழக்கு பதிவு
சக நடிகைகள் உடை மாற்றுவதை ரகசிய கேமரா வாயிலாக படம்பிடித்து அதை சமூகவலைதளங்களில் பரப்பிய பாகிஸ்தான் நடிகை குஷ்பு என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பாகிஸ்தானின் லாகூரை சேர்ந்தவர் நடிகை குஷ்பு. இவர், சினிமா மற்றும் மேடை நாடகங்களில் நடித்து வருகிறார்.இவர் நடித்து வந்த நாடக குழுவின் பிற நடிகைகளுடன் குஷ்புவுக்கு சண்டை ஏற்பட்டதை அடுத்து குழுவில் இருந்து வெளியேற்றப்பட்டார்.இதனால் ஆத்திரமடைந்த குஷ்பு, லாகூரில் உள்ள நாடக அரங்கின் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா பொருத்தினார்.
அந்த அரங்கில் பணியாற்றும் காஷிப் சான் என்பவருக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து கேமராவை பொருத்தி உள்ளார்.அந்த அறையில் நான்கு நடிகைகள் உடை மாற்றுவதை ரகசியமாக படம் பிடித்து, அதை வெளியிடப்போவதாக அவர்களை மிரட்டினார். ஒரு கட்டத்தில் அந்த, 'வீடியோ'க்களை சமூகவலைதளத்திலும் பதிவேற்றினார்.இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து குஷ்பு மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.