பாகிஸ்தானில் இலங்கை அதிகாரி உயிரோடு தீ வைத்து எரிப்பு
பாகிஸ்தானில் இலங்கை அதிகாரி ஒருவரை மதவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் உயிரோடு தீ வைத்து எரித்தனர்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் சியல்கோட் மாவட்டத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் இலங்கையைச் சேர்ந்த பிரியந்தா குமாரா 40 பொது மேலாளராக பணியாற்றி வந்தார்.இவரது அலுவலக சுவர் அருகே தெஹ்ரீக் - இ - லபைக் என்ற அமைப்பின் மதப் பிரசார போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. அதை பிரியந்தா குமாரா கிழித்து குப்பைத் தொட்டியில் போட்டுள்ளார்.
இதைப் பார்த்த தொழிற்சாலை ஊழியர்கள் அந்த அமைப்பினரிடம் தெரிவித்துள்ளனர். உடனே அந்த அமைப்பைச் சேர்ந்த நுாற்றுக்கணக்கானோர் தொழிற்சாலையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அத்துடன் அலுவலகத்தில் இருந்த பிரியந்தாவை வெளியே இழுத்து வந்து கண்மூடித்தனமாக தாக்கியதுடன் உயிரோடு தீ வைத்து எரித்தனர்.
.தீயின் வேதனை தாங்காமல் அலறித் துடித்த பிரியந்தா சில நிமிடங்களில் உயிரிழந்தார். இந்த சம்பவத்தை படம் பிடித்த சிலர் சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.இதையடுத்து பஞ்சாப் மாகாண முதல்வர் உஸ்மான் பஸ்தார் நடந்த சம்பவம் குறித்து 24 மணி நேரத்தில் விசாரணை நடத்தி அறிக்கை தரும்படி தலைமை போலீஸ் அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார்.
இலங்கை அதிகாரி உயிரோடு எரிக்கப்பட்டதை அடுத்து சியால்கோட்டில் பதற்றம் நிலவுகிறது. அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.இந்த சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.சமீப காலமாக பாக்.கில் ஹிந்து சீக்கியர் கிறிஸ்தவர் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீதான தாக்குதல் அதிகரித்து வருவது வேதனை அளிப்பதாக உலக நாடுகள் தெரிவித்துள்ளன.