மகளை எங்களிடம் விற்றுவிடு: மகளை பள்ளிக்கு அழைத்துச் சென்ற தாயை அணுகிய மர்ம நபர்களால் பரபரப்பு

03.12.2021 10:03:28

 

தன் மகளை பள்ளிக்கு அழைத்துச் சென்றுகொண்டிருந்த பிரித்தானிய பெண் ஒருவரை அணுகிய மர்ம நபர்கள் மூவர், பெட்டி நிறைய பணம் தருகிறோம், உன் மகளை எங்களிடம் விற்றுவிடு என கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இங்கிலாந்திலுள்ள Batemoor என்ற இடத்தில் அமைந்திருக்கும் Lower Meadows School என்ற பள்ளியில் தன் மகளை கொண்டு விடுவதற்காக, ஒரு பெண் தன் மகளுடன் நடந்து சென்றுகொண்டிருந்திருக்கிறார்.

அப்போது பெட்டி நிறைய பணத்துடன், மூன்று பேர் அவர்களை நெருங்கியிருக்கிறார்கள். பெரும்தொகை தருவதாகவும், அந்த மாணவியை தங்களிடம் விற்றுவிடுமாறும் அந்த மூவரும் அந்த பெண்ணிடம் கேட்டிருக்கிறார்கள்.

அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணும் அவரது மகளும் முடியாது என்று கூறிவிட்டு பக்கத்திலிருந்த பள்ளியை நோக்கி ஓடியிருக்கிறார்கள்.

அப்போது, திடீரென வாகனம் ஒன்றின் டயர்கள் கிறீச்சென ஒலியெழுப்ப, மாணவியை வாங்க வந்த அந்த மூவரும் மற்றொரு வாகனத்தில் ஏறி அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார்கள்.

பட்டப்பகலில் மாணவி ஒருவரை மர்ம நபர்கள் பணம் கொடுத்து வாங்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர்களை யாராவது பார்த்திருந்தால் தங்களுக்கு தகவல் கொடுக்குமாறு பொலிசார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.