ஜனாதிபதியின் வடக்கு விஜயம்! நிலாந்தன்.

15.01.2024 06:16:39

ஜனாதிபதி ஒரு தேர்தல் ஆண்டைத் தமிழ்மக்கள் மத்தியிலிருந்து தொடங்கியிருக்கிறார். நான்கு நாட்கள் வடக்கில் தங்கியிருந்து பல்வேறு வகைப்பட்டவர்களையும் சந்தித்து உரையாடியிருக்கிறார்.

வடக்கில் உள்ள தொழில் முனைவோர், புத்திஜீவிகள், குடிமக்கள் சமூகங்கள் என்று அடையாளம் காணப்பட்டவர்கள், பல்கலைக்கழக சமூகம் ,வடக்கில் இருந்து நாட்டுக்குள்ளும் நாட்டுக்கு வெளியே சென்று சாதனை புரிந்தவர்கள்… போன்ற பலரையும் அவர் சந்தித்துப் பாராட்டிப் படமெடுத்துக் கொண்டார். நல்லூரில் அமைந்திருக்கும் ரியோ க்ரீம் ஹவுஸ்சில் ஐஸ்கிரீம் அருந்தினார். அப்பொழுது வடக்கின் சாதனையாளர்கள் பலரை அழைத்துப் பாராட்டிப் படம் எடுத்துக் கொண்டார்.

அவர் அழைத்த எல்லாத் தரப்புக்களும் அவரை சந்தித்தன.அவருடைய அழைப்பை ஏற்றுக் கொள்ளாத ஒரே ஒரு தரப்பு நல்லை ஆதீனம்தான். வழமையாக அரசியல் தலைவர்களும் ராஜதந்திரிகளும் நல்லை ஆதீனத்தை அவருடைய இடத்துக்குச் சென்று சந்திப்பார்கள். அப்படித்தான் யாழ் மறை மாவட்ட கத்தோலிக்க ஆயரையும் தேடிச் சென்று சந்திப்பார்கள்.

ஆனால் இம்முறை நல்லை ஆதீனத்தைச் சேர்ந்தவர்களை குறிப்பிட்ட இடத்துக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதனை ஆதீனம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஏற்கனவே ரணில் வழங்கிய வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றவில்லை என்றும் ஆதீனம் குற்றம் சாட்டியது. அதனால் சந்திப்பில் ஆதீனம் கலந்து கொள்ளவில்லை. மட்டுமல்ல, ஒரு விளக்க அறிக்கையையும் வெளியிட்டது. ஒரு இந்து ஆதீனம் ஜனாதிபதியை சந்திக்க மறுத்திருக்கிறது.

அதேசமயம் கச்சேரியில் ஜனாதிபதிக்கு எதிராக காட்டப்பட்ட எதிர்ப்பில் ஒரு இந்துச் சாமியார் காவி உடையோடு காணப்படுகிறார். அவரோடு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் காணப்பட்டது.யாழ். பல்கலைக்கழக மாணவர்களைக் காணவில்லை.அது ஒரு சிறிய எதிர்ப்பு என்ற போதிலும், யாழ்ப்பாணத்தில் அவருக்கு காட்டப்பட்ட ஒரே எதிர்ப்பு அதுதான்.

ஜனாதிபதி யூஎஸ் ஹோட்டலில் புத்திஜீவிகள் மற்றும் குடிமக்கள் சமூகம் என்று அழைக்கப்பட்ட ஒரு பகுதியினரைச் சந்தித்தார்.அதில் அதிகளவு அரசு அதிகாரிகளும் காணப்பட்டார்கள். சந்திப்பின் போது அவர் 13ஆவது திருத்தத்தை வலியுறுத்திப் பேசினார்.மேல் மாகாணத்தில் இருப்பது போல பிராந்திய பொருளாதார வலையங்களை வடக்கிலும் கட்டி எழுப்பலாம் என்று ஆலோசனை கூறினார் .13ஆவது திருத்தத்துக்குள் எல்லாமே இருக்கிறது, நீங்கள் அதைப் பயன்படுத்தலாம், நாங்கள் அதற்கு வேண்டியதைச் செய்வோம் என்றும் உறுதியளித்தார். தென்கொரியா,யப்பான்,பிரித்தானியா போன்ற நாடுகளை உதாரணமாகக் காட்டி, அங்கெல்லாம் கூட்டாட்சி கிடையாது, ஆனாலும் அபிவிருத்தி உண்டு, பொருளாதார வளர்ச்சி உண்டு என்று பேசினார். 13ஆவது திருத்தத்திற்குள் போதிய அதிகாரங்கள் உண்டு அதைப் பயன்படுத்துங்கள் என்று கூறினார் .I'm