ராஜபக்சவினருக்கு மீண்டும் வாய்ப்பில்லை!

09.09.2022 15:24:19

சிறிலங்காவின் அதிபர் ரணில் விக்ரமசிங்க தனது நிகழ்ச்சி நிரலை விடுத்து ராஜபக்ச ஆதரவாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் நிகழ்ச்சி நிரலையே முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக நவ லங்கா நிதஹஸ் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான குமார் வெல்கம தெரிவித்துள்ளார்.

இலங்கை நெருக்கடிக்குள் சிக்கியுள்ள நிலையில் மேலும் அமைச்சரவை அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சு பதவிகள் அதிகரிக்கப்படலாம் என்றும் கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

 

“சிறிலங்காவின் அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் பாரியதொரு அமைச்சரவை நியமிக்கப்படும் என நான் எதிர்பார்க்கவில்லை. சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் அவர்களுக்கான செலவீனங்களும் பாரியளவில் அதிகரிக்கும்.

சர்வ கட்சி அரசாங்கத்திற்கு மட்டுமே ஒத்துழைப்பு

 

சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்படுமாயின் அதற்கு ஆதரவு வழங்கப்படும் என நாம் ஏற்கனவே உறுதியளித்திருந்தோம். எனினும் தற்போது சிறிலங்கா பொதுஜன பெரமுன மற்றும் சிறிலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்களை ஒன்றிணைத்த அரசாங்கமே சிறிலங்காவில் அமைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.

இலங்கைக்கு நல்லது செய்ய ஜனாதிபதி முற்படுவாராயின் அவருக்கு ஆதரவு வழங்க நாம் தயாராக உள்ளோம். இடைக்கால வரவு செலவு திட்டத்திற்கு எதிர்க்கட்சியினர் வாக்களிக்காதிருந்த போதிலும் அதிபர் ரணில் விக்ரமசிங்க மீது எனக்கு இருந்த நம்பிக்கையின் காரணமாக வாக்களித்தேன்.

ராஜபக்சவினருக்கு மீண்டும் வாய்ப்பில்லை

எனினும் இப்போதைய சூழ்நிலையில் ரணிலால் நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்க முடியாது என தெளிவாக தெரிகிறது. இலங்கையில் மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டாலும் ராஜபக்ச குடும்பத்தினரால் ஆட்சிக்கு வர முடியாது” எனவும் தெரிவித்துள்ளார்.