காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் தலைமறைவு
ஜம்மு காஷ்மீரின் பிரிவினைவாத தலைவர்களில் ஒருவரான சையது அலி கிலானி நேற்றிரவு மாரடைப்பால் ஸ்ரீநகரில் காலமானார். அவருக்கு வயது 92.
அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், “பாகிஸ்தான் தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். ஒரு நாள் துக்கம் அனுசரிக்கபப்டும்,” என அறிவித்துள்ளார்.
மறைந்த சையது அலி கிலானி காஷ்மீர் பிரிவினை கொள்கையை கொண்டிருந்தவர். பாகிஸ்தான் உடன் காஷ்மீரை இணைக்க விரும்பினார். அதற்காக ஆயுதப் போராட்டத்துக்கு ஆதரவாளராகவும் இருந்தார். மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், 1993-ல் ஹுரியத் மாநாட்டு கட்சியை உருவாக்கினார். இவரது பயங்கரவாத ஆதரவு போன்ற காரணங்களால் பிற தலைவர்களுடன் பிணக்கு ஏற்பட்டது. அக்கட்சியிலிருந்து பிரிந்தார். இவரை பல ஆண்டுகளாக வீட்டு காவலில் வைத்திருந்தனர்.
நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருந்த கிலானி நேற்று இரவு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். பிரிவினை காஷ்மீரை கனவு கண்டவரால் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து, மாநில அந்தஸ்து ரத்து போன்றவற்றை தான் பார்க்க முடிந்தது. அவரது இறுதி ஊர்வலத்திற்கு பெரும் கூட்டம் கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இணைய சேவை முடக்கம் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். ஸ்ரீநகரில் உள்ள தியாகிகள் கல்லறையில் அடக்கம் செய்ய வேண்டும் என்பது கிலானியின் விருப்பம். அதற்கு அரசு அனுமதி தருவது சாத்தியமில்லை என்கின்றனர்.