போரினால் சிதைந்த உக்ரைனை மறுசீரமைக்க சுமார் 750 பில்லியன் டாலர்கள் தேவை

05.07.2022 09:38:22

குர்ஸ்க் பகுதியில் குண்டுவீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதாக அப்பிராந்திய கவர்னர் தகவல் இதுதொடர்பாக குர்ஸ்க் பிராந்திய கவர்னர் ரோமன் ஸ்டாரோவோயிட் கூறுகையில், உக்ரைன் எல்லைக்கு அருகில் உள்ள ரஷிய கிராமங்கள் இன்று காலை பீரங்கித் தாக்குதலுக்கு உள்ளாகின. எல்லையில் இருந்து 10 கிலோமீட்டருக்கும் குறைவான தொலைவில் உள்ள மார்கோவோ மற்றும் டெட்கினோ கிராமங்கள் குறிவைக்கப்பட்டதாகவும் ஆனால் கூடுதல் விவரங்களை தெரியவரவில்லை என்றும் ஸ்டாரோவோயிட் தெரிவித்துள்ளார்.

உக்ரைனுக்கு 120 மில்லியன் டாலர் ராணுவ உதவி வழங்க ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் உறுதியளித்துள்ளன - போரிஸ் ஜான்சன் தகவல் ஸ்காட்லாந்தும், வேல்ஸும் இணைந்து உக்ரைனின் இராணுவ ஆதரவிற்கு 100 மில்லியன் பவுண்டுகள் ($120 மில்லியன்) வழங்க உறுதியளித்துள்ளதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். மேலும் 9,000 உக்ரேனிய அகதிகளுக்காக இரு நாடுகளுக்கும் நன்றி தெரிவித்து கொள்வதாகவும் போரிஸ் ஜான்சன் தெரிவித்தார்.

போரினால் சிதைந்த உக்ரைனை மறுசீரமைக்க சுமார் 750 பில்லியன் டாலர்கள் தேவை- அதிபர் ஜெலென்ஸ்கி போரினால் சிதைந்த நாட்டை மீண்டும் மறுசீரமைக்க சுமார் 750 பில்லியன் டாலர்கள் தேவைப்படுவதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உக்ரைன் மீட்பு மாநாட்டில் காணொலி வாயிலாக பங்கேற்ற ஜெலென்ஸ்கி, ரஷிய படையெடுப்பால் ஏற்பட்ட முழு சேத விவரங்களையும், நாட்டின் தேவைகளையும் விவரித்தார். தொடர்ந்து பேசிய அவர், உக்ரைனை மீண்டும் கட்டியெழுப்புவது ஒரு நாட்டுடைய பணி அல்ல, உலக நாடுகளின் பொதுவான பணியாகும் என்று குறிப்பிட்டார். மேலும், உக்ரைனை மறுசீரமைப்பது உலகளாவிய அமைதிக்கான ஆதரவிற்கு மிகப்பெரிய பங்களிப்பாகும் என்றும் அவர் தெரிவித்தார். 

ரஷிய ஏவுகணைகள் மைக்கோலைவ்- ஐ தாக்கியுள்ளதாக அம்மாகாண மேயர் தகவல் கருங்கடல் துறைமுக நகரமான மைக்கோலைவ் மீது ரஷிய ஏவுகணைகள் தாக்கியதாகவும், இதனால் நகரம் முழுவதும் வான்வழித் தாக்குதல் சைரன்கள் இயக்கப்பட்டதாகவும் அம்மாகாண மேயர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டெலிகிராம் பக்கத்தில், “காலையில், ஆக்கிரமிப்பாளர்கள் மைக்கோலைவ் மீது ராக்கெட்டுகளை வீசினர். மீட்புப் பணியாளர்கள், மருத்துவர்கள், அவசரகாலக் குழுக்கள் மற்றும் பயன்பாட்டுப் பணியாளர்கள் ஏற்கனவே தரையில் பணியாற்றி வருகின்றனர். மேலும் இது தொடர்பான விவரங்களை பிறகு உங்களுக்குத் தெரிவிப்பேன்” என்று ஓலெக்சாண்டர் சென்கெவிச் தெரிவித்துள்ளார்.
 

உக்ரைனின் நிப்ரோபெட்ரோவ்ஸ்க் மாகணத்தின் ஒரு பகுதியை 7 ஏவுகணைகள் மூலம் ரஷியா தாக்கி உள்ளதாக தகவல் இதுதொடர்பாக நிப்ரோபெட்ரோவ்ஸ்க் ஒப்லாஸ்ட் கவர்னர் வாலண்டின் ரெஸ்ரிசென்கோ கூறுகையில், “நேற்று இரவோடு இரவாக ஏழு ஏவுகணைகளை கொண்டு ரஷியா தாக்கியதாக தெரிவித்தார். மேலும் உக்ரேனியப் படை அவர்களில் 6 பேரை வீழ்த்தியது என்றும், ரஷிய ஏவுகணைகளில் ஒன்று போக்ரோவ்ஸ்க் நகரில் குடியிருப்புப் பகுதியைத் தாக்கியது என்றும் சில வீடுகளை சேதப்படுத்தியது, ஆனால் உயிரிழப்புகள் எதுவும் இதுவரை இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

சுவிட்சர்லாந்து முதல் உக்ரைன் மீட்பு மாநாட்டை நடத்துகிறது மாநாட்டில் பங்கேற்பாளர்கள் உக்ரைனுக்கான உதவியைக் கையாள்வதற்கான அளவுகோல்களை வரையறுப்பார்கள் என்றும் பல்வேறு கூட்டாளர்களிடையே பங்குகளை விநியோகிப்பதற்கான அளவுகோல்களை வரையறுப்பார்கள் என்றும் சுவிஸ் கூட்டமைப்பின் தலைவரும் மத்திய வெளியுறவுத் துறையின் தலைவருமான இக்னாசியோ காசிஸ் நேற்று தனது தொடக்க உரையில் தெரிவித்தார்.

லிசிசான்ஸ்க் போரில் பங்கேற்ற ரஷிய பிரிவுகள் தங்கள் போர் திறன்களை அதிகரிக்க ஓய்வெடுக்க வேண்டும் - புதின் லிசிசான்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பிராந்தியத்தை கைப்பற்றியதை உக்ரைனில் ரஷியப் படைகளுக்கு கிடைத்த பெரும் வெற்றியாக புதின் கருதுகிறார். மேலும் லிசிசான்ஸ்க் போரில் பங்கேற்ற ரஷிய பிரிவுகள் தங்கள் போர் திறன்களை அதிகரிக்க ஓய்வெடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ரஷிய வீரர்களை நடத்துவது குறித்து அந்நாட்டில் அவ்வப்போது புகார்கள் வந்த நிலையில், புதினின் இந்த கருத்து, ராணுவ வீரர்களின் நலனில் அக்கறை காட்டுவதாக இருக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.