பிரித்தானியாவில் நிரந்தர குடியுரிமை பெற்ற 35,000 இந்தியர்கள்!

29.08.2026 13:18:00

2026 ஜூன் வரை 35,000 இந்தியர்கள் பிரித்தானியாவில் நிரந்தர குடியுரிமை பெற்றனர். 2026-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முடிவடையும் காலக்கட்டத்தில், 35,384 இந்தியர்கள் பிரித்தானியாவில் Indefinite Leave to Remain (ILR) எனப்படும் நிரந்தர குடியுரிமை அனுமதியை பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 51 சதவீதம் அதிகம் என UK Home Office வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ILR என்பது பிரித்தானியாவில் காலவரையற்ற குடியிருப்பு மற்றும் வேலை செய்யும் உரிமையை வழங்கும் முக்கியமான நிலையாகும்.

   

இந்தியர்கள், பிரித்தானியாவில் நிரந்தர குடியுரிமை பெறும் மிகப்பெரிய குழுவாகத் திகழ்கின்றனர். குறிப்பாக வேலை வாய்ப்பு வழியாக பிரித்தானியாவிற்கு சென்றவர்கள், தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் வாழ்ந்த பின் ILR பெறும் தகுதியை பெற்றுள்ளனர்.

ஆனால், பிரித்தானிய அரசு விரைவில் குடியுரிமை விதிகளை கடுமையாக்க திட்டமிட்டுள்ளது. தற்போதைய 5 ஆண்டுகள் தகுதி காலம், 10 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட உள்ளது.

சில பிரிவுகளில், குறைந்த சம்பளம் பெறும் தொழிலாளர்களுக்கு 15 ஆண்டுகள், அரசு நிதி உதவிகளைப் பெறுவோருக்கு 20 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டிய நிலை உருவாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

2025-26 காலகட்டத்தில், 24,851 இந்தியர்கள் பிரித்தானிய குடியுரிமை பெற்றுள்ளனர். இதைத் தொடர்ந்து 18,489 பாகிஸ்தான் குடிமக்கள் குடியுரிமை பெற்றுள்ளனர்.

இதன் மூலம், இந்தியர்கள் மற்றும் பாகிஸ்தானியர்கள் பிரித்தானியாவில் குடியுரிமை பெறும் மிகப்பெரிய குழுவாகத் திகழ்கின்றனர்.

இதே நேரத்தில், இந்திய மாணவர்கள் பிரித்தானியாவில் குறைந்துள்ளனர். 2026 ஜூன் மாதம் முடிவடையும் காலத்தில், 82,523 இந்திய மாணவர்கள் UK மாணவர் விசா பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 16 சதவீதம் குறைவு. சீனா, 86,368 மாணவர் விசா பெற்றதால், இந்தியாவை முந்தியுள்ளது.

மேலும், மாணவர்களின் dependent family members விசா வழங்கல் 81 சதவீதம் குறைந்துள்ளது.

இந்த புள்ளிவிவரங்கள், இந்தியர்களின் பிரித்தானிய குடியேற்றத்தில் இரு விதமான மாற்றங்களை காட்டுகின்றன. வேலை வாய்ப்பு வழியாக சென்றவர்கள் அதிக அளவில் நிரந்தர குடியுரிமை பெறுகின்றனர். ஆனால், புதிய மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு விதிகள் கடுமையாக்கப்பட்டதால், அவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.