பொதுமக்கள் சிரிக்க தடை: வட கொரிய அரசு உத்தரவு

18.12.2021 09:07:14

:வட கொரியாவில் முன்னாள் அதிபர் கிம் ஜோங் இல்லின் 10வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, 10 நாட்களுக்கு பொதுமக்கள் சிரிக்கக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.


கிழக்காசிய நாடான வட கொரியாவை நிறுவிய கிம் இல் சங் மறைந்ததை தொடர்ந்து, 1994ல் நாட்டின் அதிபராக அவரது மூத்த மகன் கிம் ஜோங் இல் பதவி ஏற்றார்.பின், 17 ஆண்டுகள் ஆட்சி புரிந்த கிம் ஜோங் இல் 2011 டிச., 17ம் தேதி உயிரிழந்தார். இவரது மகனான கிம் ஜோங் உன் தற்போது அதிபராக உள்ளார்.


இந்நிலையில், கிம் ஜோங் இல்லின் 10வது ஆண்டு நினைவு தினம்அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, அடுத்த 10 நாட்களுக்கு மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.இதன்படி நாடு முழுதும் பொதுமக்கள் சிரிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மது அருந்துவது, 'ஷாப்பிங்' செய்வது ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.


மேலும் பிறந்த நாள் கொண்டாட்டங்கள், இறுதிச் சடங்குகள் ஆகிய நிகழ்வுகளை நடத்தவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.துக்கம் அனுசரிக்கப்படும் இந்த 10 நாட்களில் தடைகளை மீறுவோருக்கு கடும் தண்டனை வழங்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, வட கொரியாவின் எல்லை கிராமத்தில் வசிக்கும் ஒருவர் கூறியதாவது: கடந்த காலங்களில் துக்க நாட்களில் மது அருந்தியவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களை நாங்கள் மீண்டும் பார்க்கவே இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.மக்களுக்கு சிரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது மனித உரிமை மீறல் குற்றமாக பார்க்கப்படுகிறது.