மறைந்து வாழ விரும்பும் பாக்கிஸ்தான் உளவுத்துறை தலைவர்
தன் புகைப்படம் மற்றும் 'வீடியோ'க்களை வெளியிடக்கூடாது என அரசு அதிகாரிகளுக்கு பாக். உளவுத் துறை பொது இயக்குநர் நதீம் அஞ்சும் அறிவுறுத்தி உள்ளார்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில் ஐ.எஸ்.ஐ. எனப்படும் உளவுத் துறையின் பொது இயக்குனராக லெப்டினன்ட் ஜெனரல் நதீம் அஞ்சும் கடந்த மாதம் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த 27ம் தேதி தலைநகர் இஸ்லாமாபாதில் நடந்த பாக். தேசிய பாதுகாப்பு குழு கூட்டத்தில் நதீம் அஞ்சும் பங்கேற்றார்.
அந்த கூட்டத்தில் நாட்டின் முதல் தேசிய பாதுகாப்பு கொள்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதையடுத்து அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் வீடியோக்களையும் பாக். அரசு வெளியிட்டது.எனினும் அதில் ஒரு படத்தில்கூட உளவுத் துறை தலைவர் நதீம் அஞ்சும் தென்படவில்லை. அவரின் முகம் எதிலும் இடம்பெறாதவாறு புகைப்படங்களும் வீடியோக்களும் எடுக்கப்பட்டுள்ளன. இதற்கான காரணம் என்னவென்று தெரிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் அதுகுறித்து பாக். அமைச்சர் ஒருவர் கூறியதாவது:ஆலோசனைக் கூட்டங்களில் எடுக்கப்படும் தன் படம் மற்றும் வீடியோக்களை வெளியிடக்கூடாது என அரசு அதிகாரிகளுக்கு உளவுத் துறை பொது இயக்குநர் நதீம் அஞ்சும் அறிவுறுத்தி உள்ளார்.இதன் காரணமாகவே அரசால் வெளியிடப்பட்ட படம் மற்றும் வீடியோவில் அவர் இடம்பெறவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.