இலங்கைக்கு படையடுக்கவுள்ள ரஷ்யர்கள்

28.07.2021 10:02:52

எதிர்வரும் செப்ரெம்பர் மாதத்திலிருந்து பயணக்கட்டுப்பாடு முற்றாக நீக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ள நிலையில் இலங்கைக்கு வாராந்தம் 1000 ரஷ்ய சுற்றுலாப் பயணிகளை அழைத்துவர எதிர்பார்ப்பதாக ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

ஆங்கில ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்குச் சொந்தமான விமானமொன்று ஜுலை 30ஆம் திகதி மொஸ்கோ நகரை நோக்கிப் பயணிக்கும் என்பதோடு,அந்த விமானம் மீண்டும் ஓகஸ்ட் முதலாம் திகதி ரஷ்ய பயணிகளுடன் நாட்டை வந்தடையும் என்றும் அவர் கூறியுள்ளார்.

செப்ரெம்பர் மாதத்திலிருந்து ஒவ்வொரு வாரமும் மொஸ்கோ நகரிலிருந்து இலங்கைக்கு விமானப் பயணங்கள் இடம்பெறும் என்பதுடன், ஒவ்வொரு வாரமும் 250 ரஷ்ய சுற்றுலாப் பயணிகளை தாம் அழைத்துவர எதிர்பார்ப்பதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டிருக்கின்றார்.