பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனின் தந்தை பிரெஞ்சுக் குடிமகன் ஆகிவிட்டார்.

20.05.2022 15:48:42

பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனுடைய தந்தை பிரெஞ்சுக் குடியுரிமை பெற்றுள்ளதை, பிரான்ஸ் நீதித்துறை உறுதி செய்துள்ளது.

போரிஸ் ஜான்சனுடைய தந்தையான ஸ்டான்லி ஜான்சன் (81), கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பிரெஞ்சுக் குடியுரிமை கோரி விண்ணப்பித்திருந்தார். தற்போது அவருடைய விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக பிரான்ஸ் நீதித்துறை தெரிவித்துள்ளது.

ஆக, 2022 மே 18 முதல், ஸ்டான்லி ஜான்சன் பிரெஞ்சுக் குடிமகனும் ஆவார்.

எதற்காக பிரெஞ்சுக் குடியுரிமை கோரி விண்ணப்பித்தீர்கள் என ஸ்டான்லி ஜான்சனிடம் பிரெஞ்சு வானொலி பேட்டி ஒன்றின்போது கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது அவர், இந்த விடயம் பிரெஞ்சுக் குடிமகன் ஆவதைக் குறித்தது அல்ல, ஏற்கனவே இருப்பதை நான் பெற்றுக்கொள்வதைக் குறித்ததாகும் என்றார்.

அதாவது, ஸ்டான்லி ஜான்சனுடைய தாயாகிய ஐரீன் வில்லியம்ஸ் ஒரு பிரெஞ்சுக் குடிமகள் ஆவார்.

சரளமாக பிரெஞ்சு மொழி பேசும் ஸ்டான்லி ஜான்சன், என் தாய் பிரான்ஸ் நாட்டில் பிறந்தவர், அவரது தாயும் பிரான்ஸ் நாட்டவர், என் தாத்தாவும் அப்படித்தான். ஆக, நானும் பிரெஞ்சுக் குடிமகன் தானே, ஆகவே, நான் புதிதாக பிரெஞ்சுக் குடியுரிமை பெறவில்லை, ஏற்கனவே எனக்கு இருந்ததைத்தான் நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என்கிறார்.