இனி பெண்கள்! போப் பிரான்சிஸ் வரலாற்று சிறப்பு மிக்க அறிவிப்பு!

14.07.2022 10:51:43

வாடிக்கன்: கத்தோலிக்க கிறித்தவ அமைப்பின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட குழுவாக கருதப்படும் கார்டினல் பதவிகளுக்கு அடுத்தபடியாக ஆயர் அதாவது பிஷப் பதவி உள்ளது. உலகம் முழுவதிலும் இருந்து இதற்கு மதபோதகர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்த குழுவில் முதன் முறையாக 3 பெண்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது.
இத்தாலியின் ரோம் நகரில் உள்ள வாடிக்கன் தனி அதிகாரம் கொண்ட ஒரு குட்டி நகரம். இத்தாலி நாட்டிற்குள் இருந்தாலும் அதன் சட்ட திட்டங்கள் இந்த வாடிக்கனுக்கு பொருந்தாது.

இந்த குட்டி நகரத்திற்கென தனி சட்டங்கள் உள்ளன. இங்குதான் உலகம் முழுவதிலும் உள்ள கத்தோலிக்க கிறித்தவர்களின் தலைமையிடம் அமைந்துள்ளது. இந்த அமைப்பின் தலைவராக போப் இருக்கிறார். போப் என்பது ஒரு பதவியின் பெயர்தான். குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பின்னர் புதிய போப் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இவரைத் தொடர்ந்து கார்டினல்கள் இருப்பார்கள்.

இவர்கள் உலகம் முழுவதும் இருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். மக்கள் சேவைக்காகவும், கிறித்தவத்தை மக்களிடத்தில் கொண்டு சேர்த்ததில் சிறப்பாக பணியாற்றியவர்கள் இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இவர்களில் ஒருவர்தான் அடுத்த போப்பாக தேர்ந்தெடுக்கப்படுவார். இவர்களுக்கு அடுத்தபடியாக அதிகாரம் கொண்டவர்கள் ஆர்ச்பிஷ்ஷப்ஸ் மற்றும் பிஷப்ஸ். இவர்களும் கார்டினல்களை போல உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

இவர்களை தேர்ந்தெடுப்பதற்கென்று ஒரு தனிக்குழு உள்ளது. இந்த குழுவில் இதுநாள் வரை ஆண்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தனர். இதனையடுத்து தற்போது போப் ஒரு வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது இந்த குழுவில் ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் இடம்பெறுவர் என்பதே அந்த அறிவிப்பின் சிறப்பம்சம். போப் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 2 கன்னியாஸ்திரீகளும், 1 சாதாரண பெண்மணியின் பெயரும் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளது.

இவர்களில் ரஃபேல்லா பெட்ரினி, தற்போது வாடிக்கன் நகரத்தின் துணை ஆளுநராக உள்ளார். மற்றொருவர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த கன்னியாஸ்திரீ இவோன் ரெயுங்கோட் மற்றும் யுஎம்ஓஎஃப்சி பெண்கள் கத்தோலிக்க அமைப்பு சங்கத்தின் தலைவி மரியா லியா செர்வினோ ஆகியோர்தான் இந்த மூவர். காலங்காலமாக ஆண்களுக்கு என்று மட்டுமே அடையாளப்படுத்தப்பட்டு வந்த பதவிகள் தற்போது பெண்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது பரவலாக அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. மாற்றங்கள் மட்டுமே மாறாதது என எங்கோ படித்தது தற்போது நினைவுக்கு வருகிறது.