ETR.FM

சிறீதரன் பகிரங்க குற்றச்சாட்டு

07.07.2023 11:17 1 நிமிட வாசிப்பு
சிறீதரன் பகிரங்க குற்றச்சாட்டு

யாழ் மண்டைதீவு தூமையார் ஆலயக் கிணற்றில் 60 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கொலை செய்யப்பட்டு ஆலயக் கிணற்றில் வீசப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மையில் கொக்குதொடுவாயில் பல பெண் போராளிகளின் உடல்கள் எனக் கூறப்படும் பல மனித எச்சங்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.

எமது நாட்டில் எங்கு தோண்டினாலும் எலும்புக் கூடுகளே இன்று மீட்கப்படுகின்றன.

இந்த நாட்டில் எங்கு பார்த்தாலும் தமிழ்ப் போராளிகளின் உடல்கள் எடுப்பது போல, மண்டைதீவு தூமையார் ஆலயக் கிணற்றையும் துப்புரவு செய்தால் சுமார் 60க்கும் மேற்பட்ட இளைஞர்களின் உடல்களை தோண்டி எடுக்க முடியும் என்றார்.

இதன் காரணமாகவே இராணுவத்தினர் அங்கு மக்களின் காணிகளைப் பறித்து வைத்திருக்கின்றதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.

இதன் காரணமாக காணிகளுக்குச் சொந்தக்காரர்கள் , சொந்த நாட்டிலேயே பல பிரதேசங்களில் அகதிகளாக வாழ்கிறார்கள் என கூறிய சிறிதரன் எம்.பி நல்லிணக்கம் குறித்து அதிகம் பேசும் அரசாங்கம், சமாதானம் பேசும் அரசாங்கம் தொடர்ந்தும் அப்பாவி மக்களது காணிகளை அபகரிக்க நினைப்பது மிக மோசமான செயற்பாடு என்றும் தெரிவித்தார்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்