பிரிட்டனில் தீவிரமடையும் கொரோனா பெருந்தொற்று

16.12.2021 08:57:30

பிரிட்டனில் தீவிரமடைந்த உள்ள கொரோனா தொற்று புதிய உச்சத்தை எட்டியிருப்பது அந்நாட்டு சுகாதார அமைப்புகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிரிட்டனில் ஏற்கெனவே டெல்டாவகை கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவி வரும் நிலையில் தற்போது ஒமிக்ரான் தொற்றும் அதிகரித்து வருவதால் செய்வதறியாமல் தவித்து வருகிறது போரிஸ் ஜான்சன் அரசு.

இங்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 78,610 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. பெருந்தொற்று தொடங்கியதிலிருந்து பிரிட்டனில் பதிவான உச்சபட்ச தொற்று இதுவாகும். இதனை அடுத்து அங்கு கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 10 லட்சத்தை தாண்டியுள்ளது. ஒரே நாளில் 165 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் ஏற்கெனவே 3,000 - க்கும் மேற்பட்டவர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பு உள்ள நிலையில் இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது. வரும் நாட்களில் கொரோனா ஒரு நாள் தொற்று திகைக்க வைக்கும் அளவுக்கு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக பிரிட்டன் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

பிரிட்டனைப் போல் அமெரிக்காவிலும் தினசரி தொற்று மீண்டும் 1 லட்சத்தை தாண்டி இருக்கிறது. நேற்று ஒரே நாளில் 1 லட்சத்து 36 - த்திற்கும் மேற்பட்டோர்க்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தினசரி உயிரிழப்பும் 1690- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தினசரி தொற்றும், ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து கூடுதல் தவணை தடுப்பூசி செலுத்தும் பணிகளை அமெரிக்காவும், பிரிட்டனும் போர் கால அடிப்படையில் அதிகரித்துள்ளன. பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், ரஷ்யா, இத்தாலி, தென்னாபிரிக்கா, போலந்து ஆகிய நாடுகளிலும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது.