அமெரிக்காவை புரட்டிய புயல்

13.12.2021 08:33:39

அமெரிக்காவை தாக்கிய புயலால் ஐந்து மாகாணங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 110 ஆக உயர்ந்து உள்ளது.

அமெரிக்காவின் பல மாகாணங்களில் புயல் காரணமாக கன மழை பெய்து வருகிறது. இதனால் பலபகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. ஆர்கன்சஸ், இலினாய்ஸ், கென்டகி, மிசோரி மற்றும் டென்னசி ஆகிய அந்து மாகாணங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கென்டகி மாகாணத்தில் அதிக உயிரிழப்புகள் பதிவாகி உள்ளன.

அங்கு தொடர் மழையால் ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்த மாகாண கவர்னர் ஆண்டி பெஷியர் தெரிவித்தார். இதேபோல் மற்ற மாகாணங்களிலும் பலர் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக 110 பேருக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். இந்த மாகாணங்களில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ஜெப் பெசாஸ் இரங்கல்

புயல் காரணமாக கன மழையுடன் வீசிய சூறாவளி காற்றால் இலினாய்ஸ் மாகாணத்தில் இருந்த 'அமேசான்' நிறுவனத்திற்கு சொந்தமான கிடங்கு இடிந்து விழுந்தது. இதில் ஆறு ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் அதில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அமேசான் நிறுவனர் ஜெப் பெசாஸ், நேற்று இரங்கல் தெரிவித்துள்ளார்.