முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினரும், தற்போதைய வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தனது 69ஆவது வயதில் நேற்று (14) இரவு காலமானார்.
நீண்டகாலமாக உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த அவர், நேற்றிரவு 11.35 மணியளவில் தனது இல்லத்தில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
சில வருடங்களாக சிறுநீரகச் செயலிழப்பு காரணமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவருக்கு, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொழும்பில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதனையடுத்து வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பிய அவருக்கு, சில வாரங்களுக்கு முன்னர் மீண்டும் கடுமையான உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்ற பின்னர் வீடு திரும்பியிருந்தார்.
இந்நிலையிலேயே அவர் நேற்று இரவு காலமானதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வடமராட்சி வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட எம்.கே. சிவாஜிலிங்கம், தமிழீழ விடுதலை இயக்கத்தின் (TELO) அரசியல் செயற்பாட்டாளராகத் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக 2001 மற்றும் 2004ஆம் ஆண்டுகளில் தெரிவு செய்யப்பட்டார். தொடர்ந்து வடக்கு மாகாண சபை உறுப்பினராகவும், கடந்த ஆண்டு முதல் வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவராகவும் பணியாற்றி வந்தார்.
தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் மற்றும் தேசிய அபிலாசைகளுக்காகப் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஜனநாயக ரீதியான போராட்டங்களில் ஈடுபட்டு, உள்நாட்டிலும் சர்வதேச அரங்குகளிலும் தனது குரலைப் பதிவு செய்தவர்.
அவரது மறைவைத் தொடர்ந்து அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் தமது இரங்கல்களை வெளியிட்டு வருகின்றனர்.
அந்தவகையில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஈழத்தமிழர்களின் உரிமைக்காகத் துணிவுடன் குரல் கொடுத்த மூத்த அரசியல் செயற்பாட்டாளர் எம்.கே. சிவாஜிலிங்கத்தின் மறைவு தமிழ் மக்களுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், அன்னாரின் உடல் வல்வெட்டித்துறை, நெடியகாட்டில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்று முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
நாளை மதியம் 12 மணியளவில் வல்வெட்டித்துறை சந்தியில் அன்னாரின் பூதவுடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும்.
பின்னர், வல்வெட்டித்துறை ஊறணி இந்து மயானத்திற்கு அன்னாரது பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.