ரஷியாவுடன் மீண்டும் கைகோர்த்த நாசா

18.07.2022 12:13:51

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா மற்றும் ரஷிய விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் இடையே புதிய ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தானது. அதன்படி, இருநாடுகளும் விண்வெளி நிலைய விமானங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததால், அமெரிக்கா - ரஷியா இடையேயான விண்வெளி ஆய்வுப் பணிகள் சுணக்கம் கண்ட நிலையில், பல நாட்களுக்கு பின் மீண்டும் விண்வெளி துறையில் இருதரப்பு உறவு சுமூகமாகியுள்ளது. நாசா மற்றும் ரோஸ்கோஸ்மோஸ் இடையேயான புதிய ஒப்பந்தத்தின் கீழ், சர்வதேச விண்வெளி நிலையத்துக்குக்கான முதல் ஒருங்கிணைந்த விண்கலங்கள் செப்டம்பர் மாதம் அனுப்பப்படும். புதிய ஒப்பந்தத்தின் கீழ், அமெரிக்க விண்வெளி வீரர்கள் ரஷியாவின் சோயுஸ் விண்கலத்தில் சவாரி செய்ய முடியும். அதற்கு ஈடாக, ரஷிய விண்வெளி வீரர்கள் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட விண்கலத்தில் பறக்க அனுமதிக்கப்படுகின்றனர். இந்த ஒப்பந்தம் ரஷியா மற்றும் அமெரிக்காவின் நலன்களுக்காக ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக ரோஸ்கோஸ்மோஸ் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தம் "அமைதியான நோக்கங்களுக்காக விண்வெளியை ஆராய்வதற்கு" உதவும் என்றும், சர்வதேச விண்வெளி நிலைய திட்டத்தின் கட்டமைப்பிற்குள், ஒத்துழைப்பின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்றும் ரோஸ்கோஸ்மோஸ் தெரிவித்துள்ளது. கஜகஸ்தானில் உள்ள ரோஸ்கோஸ்மோஸ்சின் பைகோனூர் ஏவுதளத்தில் இருந்து, அமெரிக்க விண்வெளி வீரர் பிராங்க் ரூபியோ, செர்ஜி ப்ரோகோபியேவ் மற்றும் டிமிட்ரி பெட்டலின் ஆகியோருடன் சேர்ந்து விண்வெளி நிலையத்திற்கு ரஷிய விண்கலத்தில் செல்வதற்கு இந்த ஒப்பந்தம் உதவும். மறுமுனையில், புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ரஷிய விண்வெளி வீராங்கனையான அன்னா கிகினா, இரண்டு அமெரிக்க விண்வெளி வீரர்கள் மற்றும் ஒரு ஜப்பானிய விண்வெளி வீரருடன் ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ டிராகன் விண்கலத்தில் சுற்றுப்பாதை ஆய்வகத்திற்குச் செல்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்வெளி நிலையத்தில் குறைந்தபட்சம் ரஷிய வீரர் ஒருவர் மற்றும் ஒரு அமெரிக்க வீரர் இருப்பது ஆய்வகத்தை இயக்குவதற்கு முக்கியமானது என்று அமெரிக்க விண்வெளி நிறுவனம் கூறியுள்ளது. "அத்தியாவசிய பராமரிப்பு மற்றும் விண்வெளி பயணங்களுக்காக விண்வெளி நிலையத்தில் சரியான பயிற்சி பெற்ற குழு உறுப்பினர்கள் ஒருங்கிணைந்த குழுவாக விண்வெளி நிலையத்துக்கு செல்வது அவசியமாகிறது" என்று நாசா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தம் அறிவிக்கப்படுவதற்கு முன்பு, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினால், ரோஸ்கோஸ்மோஸின் தலைவரான டிமிட்ரி ரோகோசினுக்குப் பதிலாக, முன்னாள் துணைப் பிரதமரும் துணைப் பாதுகாப்பு மந்திரியுமான யூரி போரிசோவ் என்பவர் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.