ETR.FM

அரச சேவையில் போராட்ட அலை!

15.11.2026 09:25 2 நிமிட வாசிப்பு
அரச சேவையில் போராட்ட அலை!

அரச சேவைப் பொறியியலாளர் சங்கம் நாளை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது.

கள வருகை மற்றும் போக்குவரத்துக் கொடுப்பனவை 75,000 ரூபாவாக மீண்டும் வழங்குமாறு கோரியே, நாளை (16) முதல் நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச சேவைப் பொறியியலாளர் சங்கம் அறிவித்துள்ளது.

இதன்படி, கள ஆய்வுகள், மேலதிக நேரக் கடமைகள் மற்றும் பல்வேறு அரச கூட்டங்கள் உள்ளிட்ட பணிகளில் இருந்து விலகுவதற்கும் சங்கம் தீர்மானித்துள்ளது. கோரிக்கைக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கைகள் காலவரையின்றித் தொடரும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அரச கால்நடை வைத்திய அதிகாரிகளின் பற்றாக்குறை, மேலதிக கடமைக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படாமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து, எதிர்வரும் 17ஆம் திகதி நாடளாவிய ரீதியில் சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச கால்நடை வைத்தியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அரச சேவையில் 931 கால்நடை வைத்திய அதிகாரிகள் இருக்க வேண்டிய நிலையில், தற்போது சுமார் 600 பேர் மாத்திரமே பணியாற்றி வருவதாக சங்கத்தின் தலைவர் உபுல் ரஞ்சித் குமார தெரிவித்துள்ளார்.

பணியாளர் பற்றாக்குறையால் அதிக பணிச்சுமையை எதிர்கொள்வதுடன், மேலதிக கடமைகளுக்கான நியாயமான கொடுப்பனவுகளும் வழங்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், போதிய அலுவலக வசதிகள், உத்தியோகபூர்வ வாகனங்கள் இன்மை உள்ளிட்ட பிரச்சினைகளையும் எதிர்கொள்வதாகத் தெரிவித்த அவர், இவ்விடயங்கள் தொடர்பில் அமைச்சருக்கும் அமைச்சின் செயலாளருக்கும் பலமுறை அறிவித்தும் உரிய தீர்வு கிடைக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்