அமெரிக்காவின் தடைக்கு சீன அரசு கடும் கண்டனம்

25.12.2021 11:16:55

சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் இருந்து பொருட்கள் இறக்குமதி செய்ய அமெரிக்கா விதித்துள்ள தடைக்கு, சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

நம் அண்டை நாடான சீனாவின் ஜின்ஜியாங் மாகாண முகாம்களில் 10 லட்சத்திற்கும் அதிகமான உய்குர் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் அடைக்கப்பட்டு கொத்தடிமைகளாக நடத்தப்படுவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது. இதைத் தொடர்ந்து ஜின்ஜியாங் மாகாண கொத்தடிமை முகாம்களில் தயாரிக்கப்படும் பொருட்களின் இறக்குமதிக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. இதற்கான உத்தரவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டார். இதனால் கடுப்பான சீனா, சர்வதேச வர்த்தக விதிமுறைகளை அமெரிக்கா மீறிவிட்டதாக கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சீன வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறியதாவது: ஜின்ஜியாங்கில் மனித உரிமைகள் மீறப்படுவதாக திட்டமிட்டு உண்மைக்கு மாறாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது, சீனாவின் உள் விவகாரங்களில் தலையிடுவதாகும்.சர்வதேச சட்டம் மற்றும் நிர்வாக உறவுகளின் அடிப்படை விதிகளை மீறிய செயல். அமெரிக்கா சுமத்தியுள்ள குற்றச்சாட்டை சீனா வன்மையாக மறுக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.