பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று போராட்டம்!

02.09.2026 08:47:25

பல்கலைக்கழக அமைப்பை பாதிக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக் கோரி, அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று (02) மதிய உணவு இடைவேளையின் போது போராட்டங்களை நடத்தவுள்ளனர்.

 

அனைத்து அரச பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த விரிவுரையாளர்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்பார்கள் என்று பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் (FUTA) தெரிவித்துள்ளது.

அரசாங்கம் தங்கள் கோரிக்கைகளுக்குத் தீர்வு காணத் தவறினால், அடுத்த வாரம் மேலதிக தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று FUTA-வின் செயலாளரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான சாருதத்த இலங்கசிங்க தெரிவித்தார்.

அண்மைய ஆண்டுகளில் சுமார் 1,000 விரிவுரையாளர்கள் அரச பல்கலைக்கழக அமைப்பிலிருந்து வெளியேறியுள்ள அதே வேளையில், வருடாந்த மாணவர் சேர்க்கை 2015-இல் சுமார் 25,000-ஆக இருந்த நிலையில் இன்று சுமார் 45,000-ஆக அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அரச பல்கலைக்கழகங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் நிரந்தரத் தீர்வுகளை வழங்கும் வரை போராட்டங்கள் தீவிரப்படுத்தப்படலாம் என்று FUTA எச்சரித்துள்ளது.