அமெரிக்காவில் கொரோனா பலி 8 லட்சத்தை கடந்தது

16.12.2021 08:35:28

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை எட்டு லட்சத்தை கடந்துள்ளதாக, அங்குள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலை கூறி உள்ளது.
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் அதி வேகமாக உலக நாடுகளுக்கு பரவியது. வைரஸ் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், அந்நாட்டில் கொரோனா பலி எண்ணிக்கை எட்டு லட்சத்தை கடந்துள்ளது.

இது குறித்து ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:கொரோனா பரவல் அமெரிக்காவில் அதிகரித்ததால் இறப்பு எண்ணிக்கையும் உயர்ந்தது. இதுவரை பலியானோர் எண்ணிக்கை எட்டு லட்சத்தை கடந்து உள்ளது.இது அமெரிக்காவின் அட்லாண்டா மற்றும் செயின்ட் லுாயிஸ் அல்லது மினியாபோலிஸ் மற்றும் க்ளீவ்லேண்ட் நகரங்களின் மொத்த மக்கள்தொகை ஆகும்.

அமெரிக்காவில் இதய நோய் அல்லது பக்கவாதம் காரணமாக ஆண்டு தோறும் இறப்பவர்களின் எண்ணிக்கையும் இதுவே.உலகின் மொத்த மக்கள்தொகையில் 4 சதவீதம் பேர் அமெரிக்காவில் உள்ளனர். ஆனால் கொரோனாவால் உலகில் பலியான 53 லட்சம் பேரில், அமெரிக்காவின் பங்கு 15 சதவீதமாக உள்ளது.கடந்த ஆண்டு டிச., மாதம் அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கியது.

ஏப்., மாதத்திற்குள், 18 வயது நிறைவடைந்த அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகும் இரண்டு லட்சத்திற்கும் மேலானோர் பலியாகி உள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.இதற்கிடையே, 2022 மார்ச் 1ம் தேதிக்குள் அமெரிக்காவின் கொரோனா பலி எண்ணிக்கை 8.8 லட்சமாக உயரும் என, வாஷிங்டன் பல்கலை கூறி உள்ளது.