தமிழரசுக் கட்சியின் திருகோணமலை கிளை தெரிவில் முறைகேடு : கட்சியின் முக்கியஸ்தர்கள் சம்பந்தனுடன் பேச்சு

08.01.2024 06:41:47

இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளைத்தெரிவின் போது இடம்பெற்ற முறைகேடுகள் மற்றும் அது தொடர்பான விசாரணைகள் குறித்து அக்கட்சியின் முக்கியஸ்தர்கள், இரா.சம்பந்தனிடத்தில் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.


இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் திருகோணமலை மாவட்டத்தின் தமிழரசுக்கட்சியைச் சேர்ந்த முக்கியஸ்தர்களுக்கும் சம்பந்தனுக்கும் இடையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போதே அவர்கள் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

பத்து அங்கத்தவர்கள் தமது அதிருப்தி தொடர்பிலான விபரங்களை குறிப்பிட்டு, கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கும், பதில் பொதுச்செயலாளர் வைத்தியர் சத்தியலிங்கத்துக்கும் கடிதமொன்றையும் அனுப்பியுள்ளனர்.

தமிழரசுக்கட்சியின் திருகோணமலை மாவட்டக்கிளை தெரிவு உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாக வெளிப்படைத்தன்மையற்ற நிலைமைகள் நீடிப்பதோடு குறித்த சில அங்கத்தவர்கள் இலக்குவைக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.