சிங்கப்பூர் பிரதமருக்கு பேஸ்புக் மூலம் கொலை மிரட்டல்
சிங்கப்பூர் பிரதமருக்கு பேஸ்புக் மூலம் கொலை மிரட்டல் விடுத்த 45 வயது நபரை போலீசார் கைது செய்தனர்.
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே நேற்று நாரா நகரில் நடந்த தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் பேசிக்கொண்டிருந்தபோது துப்பாக்கியால் சுடப்பட்டார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த டெட்சுயா யாமகாமி என்ற நபர் முதுகு பக்கம் இருந்து ஷின்சோ அபே மீது சுட்டார். இந்த துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த அபே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஷின்சோ அபேயின் படுகொலை சம்பவம் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சிங்கப்பூர் பிரதமர் லி ஷியன் லாங்கிற்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர். பிரதமர் லி ஷியன் லாங்கை கொலை செய்துவிடுவேன் என்று செய்தி நிறுவனத்தின் பேஸ்புக் பக்கத்தில் நேற்று பதிவை வெளியிட்ட 45 வயதான நபரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து லெப்டாப், டெப்லெட், 4 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அந்த நபரிடம் கொலை மிரட்டல் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரின் பெயர் உள்ளிட்ட விவரங்களை போலீசார் வெளியிடவில்லை.