தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டாலும் சுகாதார விதிமுறைகளை பின்பற்றுங்கள் – ஆ.கேதீஸ்வரன்

29.07.2021 06:33:18

தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டாலும் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை  தொடர்ந்து பின்பற்ற வேண்டுமென வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

தடுப்பூசி வழங்கல் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கு மாகாணத்தில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் திட்டத்தின் கீழ் சீனாவில் இருந்து கிடைக்கப் பெற்ற சினோபார்ம் தடுப்பூசிகளில் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இரண்டு இலட்சம், வவுனியா மாவட்டத்திற்கு 75,000 மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு தலா 50000 தடுப்பூசிகளும் கிடைக்கப் பெற்றுள்ளன.

இந்த நான்கு மாவட்டங்களிலும் இத்தடுப்பூசியானது 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் 18 வயதிற்கு மேற்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் பாடசாலை ஆசிரியர்களுக்கும் முன்களப் பணியாளர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த தடுப்பூசி வழங்கும் பணிகள் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், யாழ்ப்பாணத்திலும் ஆரம்பிக்கப்படுகிறது

யாழ்ப்பாண மாவட்டத்திலே இரண்டாம் கட்டங்களாக ஒரு இலட்சம் பேருக்கு முதலாம் டோஸ் தடுப்பூசி வழங்கப்பட்டிருப்பதுடன், 50 ஆயிரம் பேருக்கு இரண்டாம் டோஸ் தடுப்பூசியும் வழங்கப்பட்டிருக்கின்றது.

அனைவரும் தடுப்பூசிகளை தவறாது பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். ஏனென்றால் கொரோனா நோய் மீண்டும் நாட்டில் தீவிரமாக பரவி வருகின்றது. எங்களைக் காப்பாற்ற இருக்கின்ற ஒரேயொரு விடயம் தடுப்பூசியே ஆகும்.

தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டாலும் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை நாங்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.

குறிப்பாக கைகளைச் சுத்தம் செய்து முகக்கவசங்கள் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றல் போன்ற சுகாதார பாதுகாப்பு நடைமுறையை தொடர்ச்சியாக நாம் பின்பற்றவேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.