சீனா என்ன செய்ய விரும்புகிறதோ அதற்கு அமெரிக்கா தயாராக உள்ளது

05.08.2022 10:43:37

தாய்வான் தீவைச் சுற்றிலும் குண்டுகள் வீசி, போர் பயிற்சி மேற்கொண்ட சீனாவின் ஆத்திரமூட்டும் இராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு சபையின் தகவல்தொடர்பு ஒருங்கிணைப்பாளர் ஜோன் கிர்பி ஊடகங்களிடம் கூறுகையில்,

‘தாய்வானின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்துவதற்கான நீண்டகால குறிக்கோளுக்கு முரணான நடவடிக்கை.

தாய்வான் ஜலசந்தி மற்றும் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கான எங்கள் நீண்டகால குறிக்கோளுடன் பொறுப்பற்ற மற்றும் முரணான இந்த நடவடிக்கைகளை நாங்கள் கண்டிக்கிறோம்.

ஒரே இரவில், தாய்வான் நீர்ச்சந்தி பகுதியைச் சுற்றிலும் 11 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது, இது தீவின் வடகிழக்கு, கிழக்கு மற்றும் தென்கிழக்கில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

தாய்வான் ஜலசந்தி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆத்திரமூட்டும் இராணுவ நடவடிக்கைகளை அதிகரிக்க, நான்சி பெலோசியின் வருகையை ஒரு சாக்குப்போக்காக சீனா மிகைப்படுத்தி பயன்படுத்துகிறது.

இது போன்ற நடவடிக்கைகளை சீனா மேற்கொள்ளும் என்று அமெரிக்கா எதிர்பார்த்தது. பெய்ஜிங் என்ன செய்ய விரும்புகிறதோ அதற்கு அமெரிக்கா தயாராக உள்ளது. நெருக்கடியை நாங்கள் தேட மாட்டோம், விரும்பமும் மாட்டோம். அமெரிக்கா உறுதியானதாகவும், நிலையானதாகவும் பொறுப்புடனும் இருக்கும்.

எங்கள் நலன், தாய்வானின் நலன், பிராந்தியத்தின் நலன் மட்டுமே. மேலும் பதற்றங்களை அதிகரிக்க அனுமதிக்க நாங்கள் விரும்பவில்லை.

அதே நேரத்தில், அமெரிக்கா, தாய்வானை ஆதரித்து, சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பகுதியைப் பாதுகாத்து வருவதால், சர்வதேச சட்டத்திற்கு இணங்க, மேற்கு பசிபிக் கடல்களிலும் வானங்களிலும் செயற்படுவதை அமெரிக்கா தடுக்காது

கடல் சுதந்திரம் மற்றும் சர்வதேச சட்டத்தை பாதுகாப்பதற்கான அதன் நீண்டகால அணுகுமுறையுடன் அமெரிக்கா அடுத்த சில வாரங்களில் தாய்வான் ஜலசந்தி வழியாக நிலையான விமான மற்றும் கடல் போக்குவரத்தை மீண்டும் தொடங்கும்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் சீனா மற்றும் தாய்வானைப் பிரிக்கும் மையக் கோட்டில் பறந்த விமானங்களின் எண்ணிக்கையை விட இரண்டு நாட்களில் பறந்த விமானங்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது’ என கூறினார்.

சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி, அமெரிக்க நாடாளுமன்ற கீழவைத் தலைவர் நான்சி பெலோசியை வரவேற்றுள்ள தாய்வானுக்கு எதிராக, சீனா தாய்வான் நீரிணையில் நேற்று (வியாழக்கிழமை) குண்டுகளை வீசி பயிற்சியில் ஈடுபட்டது.

போர்ப் பயிற்சியின் ஓர் அங்கமான இந்தக் குண்டு வீச்சுகள் எதிர்பார்த்த முடிவுகளைத் தந்திருப்பதாகவும் சீன இராணுவம் கூறியுள்ளது.

கடற்பகுதியில் ஏராளமான ஏவுகணைகள் வீசப்படுவதாகவும், டோங்ஃபெங் என்ற வகையைச் சேர்ந்த ஏவுகணைகளை சீன இராணுவம் ஏவியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் தொடர்ச்சியாக அமெரிக்காவின் யுஎஸ்எஸ் ரொனால்ட் ரீகன் விமானம் தாங்கி போர்க்கப்பல் தாய்வானின் தென்கிழக்கே பகுதியை ஒட்டிய பெருங்கடலை நோக்கி சென்றது.