கண்டி முஸ்லிம் வர்த்தக சங்கத்தின் 30ஆவது ஆண்டு நிறைவு விழா நாளை
கண்டி முஸ்லிம் வர்த்தக சங்கத்தின் 30ஆவது ஆண்டு நிறைவு விழா நாளை 24ஆம் திகதி பி. ப. 6.30 மணிக்கு த கிரேண்ட் கண்டியன் ஹோட்டலில் தலைவர் எம். எச் சலீம்டீன் தலைமையில் நடைபெறுகிறது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார். கௌரவ அதிதியாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே, விசேட விருந்தினர்களாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் எம். ஐ. எம். ரிஸ்வி முப்தி, இராஜாங்க அமைச்சர்களான திலும் அமுனுகம, லொஹான் ரத்வத்த, பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் பதில் தூதுவர் வாஜிட் ஹஸன் ஹஸ்ஃமி, பாகிஸ்தான் நாட்டின் வதிவிடப் பிரதிநிதி அப்சல் மரைக்கார், பாராளுமன்ற உறுப்பினர்களான எம். எச். ஏ. ஹலீம், ரவூப் ஹக்கீம் ஆகியோர்களுடன் முன்னாள் கண்டி மாநகர முதல்வர் கேசர சேனநாயக, சந்தன தென்னகோன், கண்டி மாநகர சபையின் ஆணையாளர் இசான் விஜயதிலக, முஸ்லிம் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இஸட் ஏ. எம். பைஸல், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் சேவையின் ஆலோசனை சபை உறுப்பினர் எம். முஸ்லிம் சலாஹுதீன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.
முஸ்லிம் வர்த்தக சங்கத்தின் வரலாறு
கண்டியில் முஸ்லிம்களின் வர்த்தக நடவடிக்கைகள் நீண்ட வரலாற்றை கொண்டுள்ளன. ஆரம்பகாலம் முதல் எமது ஆதிக்குடிகள் இங்கு குடியேறியமையை இதற்கு முக்கிய காரணமாகக் கூறலாம். அந்தக் காலத்தில் இருந்த முஸ்லிம்கள் வியாபாரத்தில் நம்பிக்கை, நாணயத்துடன் பல்லின மக்களிடையே மிகுந்த விசுவாசத்துடன் நடந்துகொண்டனர் என்றால் மிகையாகாது.
1993ஆம் ஆண்டிற்கு முன்பிருந்த முஸ்லிம் வர்த்தக சங்கம் ஸ்தாபிக்கப்பட்டிருந்ததுடன், கண்டி பிரதேசத்திலிருந்த மேமன் சமூக வர்த்தகர்கள் அதில் அதிகமாக அங்கத்துவம் பெற்றிருந்தனர்.
1948 ஆம் ஆண்டில் 9 முக்கிய வர்த்தகர்கள் சேர்ந்து கண்டி, திருகோணமலை வீதியில் காணப்பட்ட 279 ஆம் இலக்க கட்டடம் அமைந்துள்ள காணியைக் கொள்வனவு செய்து, அதனை மத்திய மாகாண முஸ்லிம் லீக்கிற்கு வக்பு செய்தனர். இந்த இடத்தில்தான் தற்போது ஜின்னா ஞாபகார்த்த மண்டபம் எனும் பெயரில் சங்கம் இயங்கி வருகின்றது. 1990 ஆம் ஆண்டுகாலப்பகுதியில் முஸ்லிம் வர்த்தக சங்கம் பல்வேறு சவால்ககள சந்தித்து வந்தது. இச்சந்தர்ப்பத்தில் காலத்தின் தேவையை உணர்ந்த கண்டி நகரில் பிரபல வர்த்தகர்களில் ஒருவராகத் திகழ்ந்த அல்ஹாஜ் ஏ.எம். இஸ்மாயில் அவர்கள் சமூக சிந்தனையாளர்களுடன் சேர்ந்து தனது வியாபார நிலையத்தில் கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்தார்.