ஓமிக்ரான் நுண்ணுயிரி குறித்த அச்சத்தால் தடுப்பூசி பதுக்கப்படும் அபாயம்

10.12.2021 07:32:35

ஓமிக்ரான் நுண்ணுயிரி குறித்த அச்சத்தால் தடுப்பூசி பதுக்கப்படும் அபாயம் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜெனீவாவில் நடைபெற்ற உலக சுகாதார அமைப்பு நிபுணர்கள் குழு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ராஸ் அதானம், பல மாதங்களாக தடுப்பூசி விநியோகம் தடைப்பட்ட நிலையில் கடந்த சில மாதங்களாக தான் ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி சீராக கிடைத்து வருவதாக குறிப்பிட்டார்.

மேலும் பேசிய அவர், 'உருமாறிய ஓமிக்ரான்  வேகம் எடுத்துள்ளது. அதற்கான மருத்துவ ரீதியிலான தாக்கங்களையோ அல்லது தடுப்பூசிகளின் தாக்கங்களையோ நாங்கள் முழுமையாக புரிந்து கொள்ளவில்லை. ஆனால் நிச்சமாக அது வெல்ல முடியாத ஒன்று அல்ல. வரும் நாட்கள் மற்றும் வாரங்களில் வைரஸ் தடுப்பு, தடுப்பூசி விநியோகத்தில் நாம் செய்யும் நடவடிக்கைகள் 2022ல் இந்த தொற்று நோயின் பரிணாம வளர்ச்சியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தும்,'என்றார்.

மேலும் அனைவருக்கும் தடுப்பூசி கிடைத்தால் மட்டுமே கொரோனாவை ஒழிக்க முடியும் என்று தெரிவித்த அவர், ஓமிக்ரான் குறித்த அச்சத்தால் தடுப்பூசி பதுக்கப்படும் அபாயம் இருப்பதாக கூறினார்.வல்லரசு நாடுகளால் தடுப்பூசி பதுக்கப்பட்டால் ஏழை மற்றும் வளரும் நாடுகளுக்கு தடுப்பூசி கிடைக்காமல் போகும் வாய்ப்பு இருப்பதாகவும் WHO தெரிவித்துள்ளது. பல்வேறு நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு 2 தவணைகளுக்கு பிறகு 3வது தவணை தடுப்பூசி செலுத்தி வருவதும் தடுப்பூசி தட்டுப்பாட்டை அதிகரிக்கும் என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.