ETR.FM

இலங்கை – அமெரிக்கா கல்வித்துறை உறவில் புதிய மைல்கல்!

10.11.2026 14:04 1 நிமிட வாசிப்பு
இலங்கை – அமெரிக்கா கல்வித்துறை உறவில் புதிய மைல்கல்!

இலங்கையின் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கும் ஐக்கிய அமெரிக்காவின் தென் இலினோய் பல்கலைக்கழகத்தின் நம்பிக்கைப் பொறுப்புச் சபைக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்துவதுடன், கல்வி, ஆய்வு மற்றும் அறிவுப் பரிமாற்ற நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த ஒப்பந்தம் முன்மொழியப்பட்டுள்ளது.

இதன் கீழ், இரு பல்கலைக்கழகங்களுக்கிடையில் விரிவுரையாளர்களைப் பரிமாற்றம் செய்தல், பட்டப்படிப்பு மற்றும் பட்டப்பின்படிப்பு மாணவர்களுக்கான பரிமாற்றத் திட்டங்களை ஊக்குவித்தல், கூட்டுப் பயிலமர்வுகள், மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

மேலும், சர்வதேச அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளவும், கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கையொப்பமிடப்படும் திகதி முதல் ஐந்து ஆண்டுகள் நடைமுறையில் இருக்கும் வகையில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் முன்மொழியப்பட்டுள்ளது.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கே அமைச்சரவை இவ்வாறு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்