ETR.FM

உள்ளகப் பொறிமுறையில் இதுவரை தீர்வு இல்லை!

24.11.2026 08:49 4 நிமிட வாசிப்பு
உள்ளகப் பொறிமுறையில் இதுவரை தீர்வு இல்லை!
சர்வதேச அரங்கில் தொடர்ச்சியாக கேள்விக்குள்ளாக்கப்படும் இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு விசேட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். வெளிவிவகாரத்துறை அமைச்சர் சர்வதேச அரங்குக்கு சென்று 'உள்ளக பொறிமுறை ஊடாக தீர்வு' என்று குறிப்பிடுகிறார். ஆனால் இலங்கையில் உள்ளக பொறிமுறைக்கான முன்னேற்றகரமான எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட தரப்பும் உள்ளக பொறிமுறையை ஏற்கவில்லை.இதன் தாக்கத்தை அரசாங்கம் எதிர்கொள்ள நேரிடும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.    
பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு பதிலாக அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தொடர்பில் பென்ஸ் சோல் என்பவர் குறிப்பிட்ட கருத்துக்கள் மற்றும் வெளியிட்ட அறிக்கைகள் தொடர்பில் நீதியமைச்சர் பலமுறை குறிப்பிடுகிறார்.பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் குறித்து பென்ஸ் சோல் இம்மாதம் 09 ஆம் திகதி பாரதூரமான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.ஆகவே அது குறித்து கவனம் செலுத்துமாறு நீதியமைச்சரிடம் கேட்டுக் கொள்கிறேன்.ஜி.எஸ்.பி வரிச்சலுகை விவகாரத்தில் பயங்கரவாத தடுப்புச் சட்டம் பிரதானமாக பேசப்படும்.ஆகவே இந்த விடயம் தொடர்பில் வெளிவிவகாரத்துறை அமைச்சு விசேட கவனம் செலுத்த வேண்டும். பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் குறித்து முன்வைக்கப்படும் பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரசாங்கம் கொள்கை அடிப்படையில் தீர்மானம் எடுக்க வேண்டும்.2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலுக்கு அதிகளவில் நிதி ஒதுக்கப்படுவதாக குறிப்பிடுவது முற்றிலும் தவறானது.சுற்றுலாத்துறை சேவை கைத்தொழில் அபிவிருத்திக்காக 2026 வரவு செலவுத் திட்டத்தில் 1050 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது, 2027 ஆம் ஆண்டு 818 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.ஆகவே சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலுக்கான நிதி ஒதுக்கீடு பாரியளவு குறைக்கப்பட்டுள்ளது.வடக்கு – கிழக்கு மாகாணங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை வீழ்ச்சியடைந்துள்ளது.திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஹோட்டல் உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.மன்னார் - இராமேஸ்வரன் கப்பல் சேவையை உடன் ஆரம்பித்தால் வடக்கு மாகாணத்துக்கான சுற்றுலாத்துறை சேவையை முன்னேற்ற முடியும். மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாத்துறை சேவையை மேம்படுத்த பொதுபோக்குவரத்து சேவையை வினைத்திறனாக்க வேண்டும்.சவூதியில் மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட அனோஜன் சிவராசா சகல குற்றச்சாட்டுக்களிலும் இருந்து விடுவிக்கப்பட்டமை மகிழ்வுக்குரியது. ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சர், இலங்கைக்கான சவூதி தூதுவர், மற்றும் தூதரக அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபாஇ உபுல் குமார பெரும உட்பட சகல தரப்புக்கும் நன்றித் தெரிவித்துக் கொள்கிறோம்.அதேபோல் இந்தியா, அமெரிக்கா அரசுக்கும், தேசிய மற்றும் சர்வதேச ஊடகங்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். அனோஜனை போன்று வெளிநாடுகளில் வாழும், தொழில் புரியும் இலங்கையர்கள் பல நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளார்கள். அவர்களுக்கு உரிய சட்ட மற்றும் ஏனைய ஒத்துழைப்புக்களை அரசாங்கம் உடன் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.சர்வதேச அரங்கில் தொடர்ச்சியாக கேள்விக்குள்ளாக்கப்படும் இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு விசேட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். வெளிவிவகாரத்துறை அமைச்சர் சர்வதேச அரங்குக்குச் சென்று 'உள்ளக பொறிமுறை ஊடாக தீர்வு' என்று குறிப்பிடுகிறார்.ஆனால் இலங்கையில் உள்ளக பொறிமுறைக்கான முன்னேற்றகரமான எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட தரப்பும் உள்ளக பொறிமுறையை ஏற்கவில்லை.பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தீர்வு வழங்குவதற்கு அரசாங்கம் இதுவரையில் முன்னேற்றகரமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இதன் தாக்கத்தை வெளிவிவகார அமைச்சு எதிர்க்கொள்ள நேரிடும் என்றார்.
பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE நெஞ்சம் மறப்பதில்லை