இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியான அநுரகுமார திசாநாயக்க இன்று (24) தனது 58 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
1968ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் திகதி மாத்தளை, தேவஹுவ பகுதியில் பிறந்த அநுரகுமார திசாநாயக்க, மாணவர் அரசியல் ஊடாகத் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தார்.
தம்புத்தேகம ஆரம்பப் பாடசாலையில் ஆரம்பக் கல்வியைக் கற்ற அவர், தம்புத்தேகம மத்திய கல்லூரியில் இடைநிலைக் கல்வியைப் பூர்த்தி செய்தார். பின்னர் களனி பல்கலைக்கழகத்தில் உயர்கல்வியைத் தொடர்ந்து பட்டம் பெற்றார்.
1987 ஆம் ஆண்டு சோசலிச மாணவர் சங்கத்தின் ஊடாக அரசியலில் பிரவேசித்த அவர், 1997 ஆம் ஆண்டு அதன் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்.
2000ஆம் ஆண்டு முதன்முறையாக நாடாளுமன்றத்திற்குத் தெரிவான அவர், 2004ஆம் ஆண்டு விவசாய அமைச்சராகவும் பதவி வகித்தார்.
2014 ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவராக நியமிக்கப்பட்ட அநுரகுமார திசாநாயக்க, 2019 ஆம் ஆண்டு தேசிய மக்கள் சக்தி (NPP) உருவாக்கப்படுவதிலும் முக்கிய பங்காற்றினார்.
2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் 3.16 சதவீத வாக்குகளைப் பெற்ற அவர், 2024ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்று தனது அரசியல் பயணத்தில் முக்கிய மைல்கல்லை எட்டினார்.
பல தசாப்தகால அரசியல் அனுபவம், சவால்கள், தோல்விகள் மற்றும் வெற்றிகளைக் கடந்து, 2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் 22 ஆம் திகதி இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுர குமார திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டார்.
இந்நிலையில், தனது 58 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.