கோதுமை மா கிலோவொன்றின் விலை அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாடளாவிய ரீதியில் கோதுமை மா விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளதாகக் கோதுமை மா உற்பத்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
கோதுமை மா கிலோவொன்று 220 ரூபாவிற்கும் அதிகமான பல்வேறு விலைகளின் கீழ் விற்பனை செய்யப்படுவதாகவும், அந்த விலையை விடக் குறைவாக உள்ளூர் சந்தையில் அரிசி கிலோவொன்றைக் கொள்வனவு செய்வதற்கான வாய்ப்புள்ள நிலையில், கோதுமை மாவிற்கான நுகர்வோர் கேள்வி குறைந்துள்ளதாகவும் அந்நிறுவனத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
கோதுமை மா விலை அதிகரித்தமையினால் தமது உற்பத்திகளின் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளதாக வெதுப்பக (பேக்கரி) உற்பத்தியாளர்களும் பிராந்திய விற்பனை முகவர்கள் ஊடாகத் தமது நிறுவனத்திற்கு அறிவித்துள்ளதாக அவ்வதிகாரி கூறினார்.
நிலவும் யுத்த சூழ்நிலை காரணமாகக் கப்பல் கட்டணங்கள் அதிகரிப்பு நாட்டிற்குக் கோதுமை தானியங்களைப் பெற்றுக்கொள்ளும் கனடா, அவுஸ்திரேலியா, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளில் கேள்விக்கு ஏற்ற கோதுமை தானியக் கையிருப்பு வழங்கப்படாமையினாலேயே இவ்வாறு கோதுமை மா விலையை அதிகரிக்க நேரிட்டதாகவும், தற்போதைய நிலைமையின் கீழ் எதிர்வரும் காலங்களில் கோதுமை மா விலை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் அவ்வதிகாரி மேலும் தெரிவித்தார்.