ETR.FM

மூன்றாம் தவணையின் இறுதி வாரம் நாளை ஆரம்பம்!

29.11.2026 15:18 2 நிமிட வாசிப்பு
மூன்றாம் தவணையின் இறுதி வாரம் நாளை ஆரம்பம்!
2026 ஆம் கல்வியாண்டின் மூன்றாம் தவணையின் இறுதி வாரம் நாளை (30) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவேவா தெரிவித்துள்ளார்.

இதன்படி, எதிர்வரும் டிசம்பர் 4 ஆம் திகதியுடன் 2026 ஆம் கல்வியாண்டுக்கான பாடசாலை கல்வி நடவடிக்கைகள் நிறைவடையவுள்ளன.

2026 ஆம் ஆண்டில் மொத்தம் 197 பாடசாலை நாட்களை முன்னெடுக்க ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், டித்வா சூறாவளி காரணமாகப் பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டமை உள்ளிட்ட இடையூறுகளால் பாடசாலை நாட்களின் எண்ணிக்கை 186 ஆகக் குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், மேலும் பாடசாலை நாட்களைக் குறைப்பதற்கு எவ்வித வாய்ப்பும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, 2026 ஆம் கல்வியாண்டுக்கான அனைத்து கல்வி நடவடிக்கைகளையும் எவ்வித தடையுமின்றி அல்லது மாற்றமின்றி டிசம்பர் 4 ஆம் திகதிக்குள் நிறைவு செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சில பாடசாலைகளில் இறுதிப் பரீட்சைகள் நடைபெற்று வருவதுடன், மேலும் சில பாடசாலைகளில் பரீட்சைகள் நிறைவடைந்துள்ளன. அதேவேளை, சில பாடசாலைகளில் இணைப்பாடவிதான செயற்பாடுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், பாடசாலை நாட்காட்டியின்படி நாளை (30) வழமையான பாடசாலை நாளாகும் எனத் தெரிவித்துள்ள கல்வி அமைச்சின் செயலாளர், மாணவர்களும் பெற்றோர்களும் அன்றைய தினத்தை வழமையான பாடசாலை நாளாகக் கருதி, பரீட்சைகள் உள்ளிட்ட அனைத்து திட்டமிடப்பட்ட கல்வி நடவடிக்கைகளிலும் எவ்வித மாற்றமுமின்றி பங்கேற்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE கதம்பம்