|
தமிழகத்தில் தொடர்ந்து கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், தீபாவளி தினத்தில் மட்டும் 10க்கும் அதிகமான கொலைகள் நடந்துள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இது தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பற்றிய கேள்வியை எழுப்பி உள்ள நிலையில் மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு நிலவரம் பற்றி அமித்ஷாவின் மத்திய உள்துறை அமைச்சகம், தமிழக ஆளுநர் விஸ்வநாத் அர்லேகரிடம் அறிக்கை கோரியுள்ளது. தமிழகத்தில் முதல்வர் விஜய் கட்டுப்பாட்டில் உள்துறை உள்ளது. இதற்கிடையே தான் தமிழகத்தில் தற்போது பல்வேறு குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. |
|
குறிப்பாக தீபாவளி நாளில் மட்டும் 10க்கும் அதிகமான கொலைகள் நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. குறிப்பாக இரவு 10.30 மணியளவில் பொதுமக்களுக்கு இடையூறாக பட்டாசு வெடித்ததை தட்டிக்கேட்க தேனியை சேர்ந்த உதவி சப் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் (வயது 56) என்பவர் கொலை செய்யப்பட்டதால் போலீசாருக்கே பாதுகாப்பு இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் இந்த குற்றச்சாட்டை தமிழக அரசும், காவல்துறையும் மறுத்தது. தமிழகத்தில் தீபாவளி தினத்தில் 10க்கும் மேற்பட்ட கொலைகள் நடக்கவில்லை. 8 கொலைகள் மட்டுமே நடந்ததாக விளக்கம் அளிக்கப்பட்டது. இருப்பினும் மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு தொடர்பான விவகாரம் பேசும்பொருளானது. முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை பராமரிப்பதில் தோல்வியடைந்துவிட்டது என்று எதிர்க்கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்தனர். முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின், ''சட்டம் ஒழுங்கு தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளது. நிர்வாகம் கோமா நிலையில் உள்ளது'' என சாடியிருந்தார். அதேபோல் எடப்பாடி பழனிச்சாமி உள்பட பிற எதிர்க்கட்சிகளின் தலைவர்களும் விமர்சனம் செய்திருந்தனர். இந்நிலையில் தான் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்த விரிவான அறிக்கையை தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகரிடம் மத்திய உள்துறை அமைச்சகம் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சமீப காலமாக நிகழ்ந்துள்ள வன்முறை சம்பவங்கள் குறித்தும், பொது அமைதியை பேண மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஆளுநரின் மதிப்பீட்டை மத்திய அமைச்சகம் கோரியுள்ளது. தமிழகத்தில் பொதுப் பாதுகாப்பு குறித்த விவாதங்கள் தீவிரமடைந்துள்ள அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சூழலில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் தமிழகத்தின் நிலவரத்தை மத்திய உள்துறை அமைச்சகம் உன்னிப்பாக கவனிக்க தொடங்கி உள்ளது உறுதியாகி உள்ளது. தற்போது தமிழகத்தில் உள்துறையைமுதல்வர் விஜய் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். இதனால் இந்த கொலைகளுக்கு முதல்வர் விஜய் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று நேரடியாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளன. இது விஜய்க்கு சிக்கலை ஏற்படுத்தியதால் நேற்று அவரசமாக மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு நிலவரம் பற்றி ஆலோசனை மேற்கொண்டார். அதுமட்டுமின்றி கடந்த 2 நாட்களாக மாநிலத்தில் போலீசார் ரவுடிகளை அழைத்து வார்னிங் செய்ததேதாடு, கைது நடவடிக்கையை மேற்கொண்டனர். முதல்வர் விஜய் தற்போது சுதாரித்துள்ள நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் ஆளுநர் அர்லேகரிடம் இருந்து மாநில சட்டம் - ஒழுங்கு பற்றி அறிக்கை கோரியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. |