பிரபல நடிகை தற்கொலை வழக்கு..
நடிகை துனிஷா சர்மா தளத்தில் நேற்று முன்தினம் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். ஷீசன் கான் வலுக்கட்டாயமாக காதலிக்க வேண்டும் என்று துனிஷாவை வற்புறுத்தியதாக அவரது தாயார் கூறியுள்ளார். இந்தியில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் துனிஷா சர்மா.
இவர் தன்னுடன் நடித்த நடிகர் ஷீசன்கானை காதலித்து வந்தார். ஆனால் சமீபத்தில் துனிஷாவை திருமணம் செய்துகொள்ள நடிகர் ஷீசன் கான் மறுத்ததாக தெரிகிறது. இதனால் கவலையில் இருந்த நடிகை துனிஷா சர்மா மும்பை அருகே படப்பிடிப்பு தளத்தில் நேற்று முன்தினம் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நடிகை துனிஷா சாவுக்கு காதலன் ஷீசன் கான் தான் காரணம் என்று புகார்கள் கூறப்பட்டது. இதையடுத்து நடிகர் ஷீசன் கான் கைது செய்யப்பட்டார். அவர் மீது தற்கொலைக்கு தூண்டிய தாக வழக்குப்பதிவு செய்யப் பட்டது. நீதிபதி முன்பு நிறுத்தப்பட்ட நடிகர் ஷீசன் கானை போலீசார் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள். இன்று காலை அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார்.
நடிகை துனிஷா சர்மா சாவுக்கு நான் காரணம் அல்ல. ஏற்கனவே அவர் பலதடவை தற்கொலைக்கு முயற்சி செய்து இருக்கிறார். தற்போது தற்கொலை செய்து என்மீது பழி போட்டுள்ளார். எனக்கும் அவரது மரணத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று போலீசாரிடம் தெரிவித்தார். என்றாலும் நடிகர் ஷீசன் கானிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இன்னும் 2 தினங்கள் விசாரணையில் பல புதிய தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே நடிகை துனிஷாவின் தாயார் பரபரப்பு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது, "எனது மகள் துனிஷா நடிப்பு மட்டுமே இலக்காக கொண்டிருந்தாள். திரை உலகில் புகழ்பெற வேண்டும் என்பது அவளது ஆசை ஆகும். ஆனால் உடன் நடித்த ஷீசன் கான் கடந்த 4 மாதங்களாக எனது மகளை மிரட்டி வந்தான். வலுக்கட்டாயமாக காதலிக்க வேண்டும் என்று வற்புறுத்தினான். ஒரு கட்டத்தில் எனது மகள் வேறு வழியில்லாமல் சம்மதித்தாள்.
ஆனால் எனது மகளுக்கு அவன் துரோகம் செய்துவிட்டான். ஷீசன் கானுக்கு ஏராளமான துணை நடிகைகளுடன் பழக்கம் உள்ளது. நிறைய பெண்களை அவன் ஏமாற்றி உள்ளான். இதை அறிந்து எனது மகள் கேட்ட தால் அவன் எனது மகளை கொடுமை படுத்த தொடங்கிவிட்டான். 3 மாதங்கள் பழகிவிட்டு துரோகம் செய்துள்ளான். அவனை போலீசார் விசாரித்து விட்டு வெளியே விட்டுவிடக்கூடாது. கடுமை யான தண்டனையை அவனுக்கு வாங்கி கொடுக்க வேண்டும்"இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே நடிகை துனிஷா சர்மா தற்கொலை தொடர்பாக பல்வேறு தகவல்கள் பரவி உள்ளது. அவர் கர்ப்பமாக இருந்ததாகவும், லவ் ஜிகாத் மூலம் அவரை மதமாற்ற முயற்சி நடந்ததாகவும் தகவல்கள் பரவின. மும்பை பா.ஜ.க. தலைவர்களும் நடிகர் ஷீசன் கான் மீது மதமாற்ற புகார் தெரிவித்தனர். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை எல்லாம் போலீசார் திட்ட வட்டமாக மறுத்துள்ளனர்.